ad

மலேசியாவில் மாறிவரும் சமூக போக்குகள் மக்கள் தொகையை குறைக்கின்றன

12 செப்டெம்பர் 2025, 2:43 AM
மலேசியாவில் மாறிவரும் சமூக போக்குகள் மக்கள் தொகையை குறைக்கின்றன
மலேசியாவில் மாறிவரும் சமூக போக்குகள் மக்கள் தொகையை குறைக்கின்றன
மலேசியாவில் மாறிவரும் சமூக போக்குகள் மக்கள் தொகையை குறைக்கின்றன

ஷா அலாம், செப். 12 — உயரும் வாழ்க்கைச் செலவு மற்றும் மாறிவரும் சமூக போக்குகள் ஆகிய அழுத்தங்களின் கீழ், மலேசியா கடுமையான மக்கள் தொகை சவாலுக்கு எதிர்கொண்டு வருகிறது.

தற்போது, அதிகமான மலேசியர்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்ள, திருமணம் செய்யாமல் இருக்க அல்லது குழந்தைகளை பெறாமலிருக்கத் தேர்வு செய்கிறார்கள். இந்த போக்கு அனைத்து முக்கிய சமூகங்களிலும் காணப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் பூமிபுத்ர, சீனர் மற்றும் இந்திய சமூகங்களிலும் பிறப்பு விகிதம் குறையும் என மதிப்பிடப்படுகிறது. இதனால் நாடு முதியோர் சமூகத்தை நோக்கி நகரும்.

புள்ளியியல் துறையின் (DOSM) Population Projection 2020-2060 அறிக்கையின் படி, மலேசியாவின் மக்கள் தொகை 2059-இல் 42.38 மில்லியனில் உச்சத்தை அடையும். ஆனால் வளர்ச்சி விகிதம் 2020-இல் 1.7 சதவீதத்திலிருந்து 2060-இல் 0.1 சதவீதமாகக் குறையும்.

மிகவும் கூர்மையான சரிவு மலேசிய சீனர்களில் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 2020-இல் 23.2 சதவீதத்திலிருந்து 2060-இல் 14.8 சதவீதமாகக் குறையும். மலேசிய இந்தியர்களின் விகிதம் 6.7 சதவீதத்திலிருந்து 4.7 சதவீதமாகக் குறையும்.

பூமிபுத்ர சமூகம் 69.4 சதவீதத்திலிருந்து 79.4 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், சராசரி குடும்ப அளவு தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கும்.

பலருக்கு திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை ஆரம்பிப்பது இப்போது ஒரு “ஆடம்பரமான தேர்வாக” மாறியுள்ளது. ஆனால், இது தனிப்பட்ட விஷயம் மட்டுமல்ல, பொருளாதாரம், கல்வி, தொழில் மற்றும் நாட்டின் நீண்டகால நிலைத்தன்மைக்கு பரந்த விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு பெரிய பிரச்சனையாகும்.

மலேசிய சீன ஆய்வுகள் மையத்தின் கல்விக் குழு இயக்குநர் சாங் யுன் ஃபா கூறுகையில், பொருளாதார அழுத்தம், மாறிவரும் குடும்ப அமைப்பு, குறைந்துவரும் பாரம்பரிய மதிப்புகள் மற்றும் போதிய கொள்கை ஆதரவு இல்லாமை ஆகியவை அனைத்து இனங்களிலும் இளைஞர்கள் திருமணம் செய்யவோ, குழந்தை பெறவோ விரும்பாத முக்கிய காரணங்களாக உள்ளன.

டெய்லர்ஸ் பல்கலைக்கழக இணைப் பேராசிரியரான அவர் மேலும் கூறுகையில், முந்தைய காலங்களில் திருமணம் மற்றும் குழந்தை பெறுதல் இயல்பான மைல்கற்களாகக் கருதப்பட்டன. ஆனால், இன்றைய சமூகத்தில் அவை நிதி மற்றும் நடைமுறை சிக்கல்களுடன் கவனமாக எடைபோடப்பட வேண்டிய தேர்வுகளாகக் கருதப்படுகின்றன.

இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் குழந்தை பராமரிப்புக்கு குடும்ப ஆதரவு, நெகிழ்வான வேலை வாய்ப்பு மற்றும் போதிய அரசாங்க உதவி ஆகியவை இருந்தால் மட்டுமே பெற்றோராக மாறுவது பற்றி சிந்திக்கிறார்கள். ஆனால் அவை பெரும்பாலும் பூர்த்தி செய்யப்படுவதில்லை என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

தாமதமான திருமணத்தால் இந்திய சமூகத்தின் எண்ணிக்கை குறையும் என முன்னாள் இந்து சங்கம் தலைவர் நாகப்பன் ஆறுமுகம் கூறுகையில். மக்கள் தொகை குறைவதற்கான முக்கிய காரணம் தாமதமான திருமணமே ஆகும் என்றார்.

மேலும், பணம் சேமிக்க, உயர்ந்த சம்பளம் மற்றும் மரியாதைக்குரிய வேலைகளை பெற, உயர் கல்வியை தொடர, வீடு மற்றும் கார் போன்ற சொத்துகளை வாங்கி சமூக அந்தஸ்தைப் பெறுவதற்காகப் பலர் திருமணத்தை தாமதப்படுத்துகின்றனர்.

இதன் விளைவாக, பல இளைஞர்கள் 30 வயதிற்குப் பிறகே திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால், பெரும்பாலும் உடல் நலக் காரணங்களால் குழந்தை பெறுவதில் சிரமங்களை உருவாக்குகிறது. இதனால், மக்கள் தொகை விகிதம் குறைந்து வருகிறது.

இளைஞர்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெறும் வாய்ப்புகளை அதிகரித்து, பெரிய குடும்பங்களை உருவாக்க வேண்டும் என்றார் நாகப்பன்.

கூடுதலாக, இந்த பிரச்சனையை மலேசியா மட்டும் எதிர்கொள்ளவில்லை என்று தென் கொரியா (0.8) மற்றும் சிங்கப்பூர் (0.9) உட்பட பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்திற்குக் குறைவாக உள்ள பல நாடுகளும் மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

“நிலையான மக்கள் தொகையை பராமரிக்க, ஒரு பெண் பெற வேண்டிய சராசரி குழந்தை எண்ணிக்கை குறைந்தது 2.1 ஆக இருக்க வேண்டும். ஆனால், மலேசியாவின் அனைத்து இனக் குழுக்களும் இந்த அளவை விட குறைவாகவே உள்ளன.”

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கூட, குழந்தை போனஸ், பெற்றோர் விடுப்பு மற்றும் குழந்தைப் பராமரிப்பு உதவித்தொகை போன்ற விரிவான கொள்கைகள் நடைமுறையில் இருந்தாலும், அதன் பிரச்சனை இருக்கவே செய்கிறது. ஆதரவு அமைப்புகள் குறைவாக உள்ள மலேசியா இன்னும் பெரிய சவால்களைச் சந்திக்கிறது.

“மக்கள் குழந்தைகளை பெற மறுப்பதை விட திருமணம் செய்ய விரும்பாதவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே முக்கிய பிரச்சனை,” என்று அவர் கூறினார். குறைந்த பிறப்பு விகிதத்தை மாற்ற, ஆரோக்கியமான காதல் மற்றும் திருமண சூழலை மீண்டும் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது எனவும் வலியுறுத்தினார்.

கொள்கை, மனப்போக்கு மாற்றம்

கொள்கை ஊக்குவிப்புகளுக்கு அப்பாற்பட்டும், மனப்போக்கு மாற்றமும் அதே அளவில் அவசியமாகும் என அவர் நம்புகிறார். இன்றைய இளைஞர்கள் குழந்தைகளை எதிர்கால பாதுகாப்பாகக் கருதுவதில்லை, மேலும் முதியோரை பராமரிக்க வேண்டும் என்ற பாரம்பரிய சிந்தனையை மறுக்கின்றனர்.

“‘முதுமையில் ஆதரவுக்காகக் குழந்தைகளை வளர்த்தல்’ என்பதன் அர்த்தத்தை மீண்டும் விளக்க வேண்டும். அது நிதி சார்ந்ததாக இல்லாமல் உணர்ச்சி சார்ந்ததாக இருக்க வேண்டும்,” என்று சாங் கூறினார்.

முதியோர் தங்கள் ஓய்வூதியத்திற்காகத் திட்டமிட்டு, தங்கள் குழந்தைகளுக்கு சுமையாக மாறாமல் இருக்க வேண்டும். இதனால் இளைஞர்கள் குடும்பத்தை ஆரம்பிப்பதில் எதிர்கொள்ளும் உளவியல் அழுத்தம் குறையும்.

சிலாங்கூர் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடியும். இல்திசாம் அனாக் சிலாங்கூர் திட்டம், மூத்த குடிமக்களுக்கு ஷாப்பிங் வவுச்சர்கள் மற்றும் இறப்பு உதவி போன்ற பல முதியோர் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த திட்டங்கள் பெரும்பாலும் சரியான முறையில் பிரசாரம் செய்யப்படுவதில்லை, குறிப்பாக நகர்ப்புற மற்றும் சீனர் சமூகங்களில். இதனால் பலர் அவற்றை அறியாமல் இருந்து, பயன்கள் பயன்படுத்தப்படாமல் போகின்றன.

பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்தால், மக்கள் தொகை அமைப்பை சமநிலைப்படுத்த அரசு குடியேற்றக் கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் கூறினார். ஆனால் இது இன அமைப்பு, சமூக ஒருங்கிணைவு, வெளிநாட்டு தொழிலாளர் மற்றும் திறமை மையப்பிரிவு போன்ற சிக்கலான மற்றும் நுணுக்கமான பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என எச்சரித்தார்.

இந்நிலையில், நாகப்பன் இந்திய இளைஞர்களுக்கான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி, திருமணத்தையும் குடும்ப அமைப்பையும் ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், குறைந்து வரும் இந்திய சமூகத்தின் நீண்டகால விளைவுகளை இளைஞர்களுக்கு உணர்த்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியமானவை என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.