காஜாங், செப். 12 - ஆசிரியரைத் தாக்கியதாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் குற்றஞ்சாட்டப்பட்ட 14 வயது மாணவர் நேற்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனது ஒப்புதல் வாக்குமூலத்தை மறுத்து விசாரணை கோரினார்.
மாஜிஸ்திரேட் ஃபாத்தின் டயானா ஜாலில் முன்னிலையில் நடைபெற்ற இன் கேமரா எனப்படும் தனி விசாரணயில் குற்றச்சாட்டு தமிழில் வாசிக்கப்பட்ட போது முதலாம் படிவ புகுமுக வகுப்பில் பயிலும் அந்த மாணவர் தனது மனுவை தாக்கல் செய்ததாக அவரது வழக்கறிஞர் எஸ். பிரியலதா நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகங்களிடம்
கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு சார்பில் துணை அரசு வழக்கறிஞர் சித்தி நூர் அலியா சஃப்ரி ஆஜரானார்.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி மாலை 4.48 மணியளவில் இங்குள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் 29 வயது ஆசிரியருக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக அந்த மாணவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறைத் தண்டனை, அதிகபட்சம் 2,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும்
குற்றவியல் சட்டத்தின் 323வது பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது,
இந்த வழக்கில் பிரதிநிதித்துவத்தை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு முன்பு அரசுத் தரப்பு வழங்கவிருக்கும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாம் ஆய்வு செய்யவுள்ளதாக பிரியலதா மேலும் கூறினார்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணைக்கு கூடுதல் நேரம் ஒதுக்குமாறு நாங்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தோம். தொடர்புடைய ஆவணங்களை அரசு தரப்பு நீதிமன்றத்திற்கும் பிரதிவாதிக்கும் வழங்குவதற்கும் ஏதுவாக அடுத்த விசாரணை அக்டோபர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 28ஆம் தேதி இங்குள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் மாணவர் தனது ஒருவர் ஆசிரியரைத் தாக்கி மிரட்டியதை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
ஆசிரியரைத் தாக்கிய வழக்கு - மாணவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
12 செப்டெம்பர் 2025, 1:51 AM