கோத்தா கினபாலு, செப். 11 - ஜாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணையில் சாட்சியாக இருந்த உடற்கூறாய்வு நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியுவுக்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் செய்திகளை சமூக ஊடகமான முகநூல் வாயிலாக
வெளியிட்டதாக முன்னாள் தலைமையாசிரியர் ஒருவர் மீது இன்று இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி மார்லினா இப்ராஹிம் முன் தமக்கெதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை 61 வயதான கமுல் கமாருடின் என்ற அந்த ஆடவர் மறுத்து விசாரணை கோரினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தெரிந்தே அச்சுறுத்தும் தகவலை பதிவிட்டுள்ளார் என்றும் அதனை டாக்டர் ஹியு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு வாசித்தார் என்றும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பதிவு கடந்த செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி இரவு 11.00 மணியளவில் 'அமுங் கமருடின்' என்ற சுயவிவரத்தைப் பயன்படுத்தி முகநூல் வழியாக பதிவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த குற்றம் தொடர்பில் கமுல் மீது 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233(1)(a) வது பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 233(2)வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
இப்பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கபட்டால் ஓராண்டு வரை தண்டனை, அதிகபட்சமாக 500,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை இரு நபர் உத்தரவாதத்துடன் 20,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்கவும் வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்டவரை தொந்தரவு செய்ய வேண்டாம் அறிவுறுத்தவும் துணை அரசு வழக்கறிஞர் யூஜெனி மெரிடித் நீதிமன்றத்தில் பரிந்துரைத்தார்
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எல்ஹனன் ஜேம்ஸ், தனது கட்சிக்காரர் போலீஸ் விசாரணை முழுவதும் முழுமையாக ஒத்துழைத்ததாகவும் அவர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி ஜாமீன் தொகையைக் குறைக்கக் கோரினார்.
பின்னர் நீதிபதி கமுலை இரு உள்ளூர் நபர் உத்தரவாத்துடன் 20,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கினார். இந்த வழக்கு செப்டம்பர் 29 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
உடற்கூறாய்வு நிபுணரை மிரட்டியதாக முன்னாள் தலைமையாசிரியர் மீது குற்றச்சாட்டு
11 செப்டெம்பர் 2025, 10:11 AM