கோலாலம்பூர், செப். 11 - இங்குள்ள கம்போங் சுங்கை பாருவில் இன்று குடியிருப்புகளை காலி செய்யும் நோட்டிஸ் வழங்கும் நடவடிக்கையின் போது கூட்டத்தினரிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தைத் தொடர்ந்து பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தின் போது கனமான பொருள் வீசப்பட்டதில்
டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைவர் உதவி ஆணையர் சுலிஸ்மி அப்பெண்டி சுலைமான் காயமடைந்தார் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ பாடில் மார்சஸ் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
சில தரப்பினர் வரம்பு மீறி செயல்படும்போது கட்டளை அதிகாரியாக செயல்படும் எனது அதிகாரிகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களில் இதுவும் ஒன்று. இந்த சம்பவம தண்டனைச் சட்டத்தின்படி விசாரிக்கப்படுகிறது என்று பாடில் கூறினார்.
குடியிருப்புகளை காலி செய்யும் நோட்டீசை 37 வரிசை தரை வீடுகளை உள்ளடக்கிய 26 உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை நடைபெறும் இடத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக சுலிஸ்மி கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பாடில் கூறினார். இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பொது மக்களில் ஒருவருக்கு சிறிய காயம், அதாவது கையில் சுளுக்கு ஏற்பட்டதாக அறிகிறோம். அந்த நபரை நாங்கள் அடையாளம் காண முயன்று வருகிறோம் என்று அவர் கூறினார்.
கம்போங் சுங்கை பாருவில் வசிக்காதவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரு கும்பலை தனது தரப்பு கண்டறிந்துள்ள வேளையில் அவர்கள் ஒரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக நம்பப்படுகிறது என அவர் கூறினார்.
சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அல்லது தனிநபர்களைப் பற்றி புகாரளிப்பதன் மூலம் கம்போங் சுங்கை பாருவில் வசிப்பவர்கள் எங்கள் கண்களாகவும் காதுகளாகவும் இருக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
முன்னதாக, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதில் காவல்துறையின் பொறுப்பை புரிந்துகொள்ளும் வகையில் கூடியிருந்த குடியிருப்பாளர்களிடம் பாடில் விளக்கம் அளித்தார்.
கம்போங் சுங்கை பாருவில் மோதல் - டாங் வாங்கி மாவட்ட ஓ.சி.பி.டி. காயம்
11 செப்டெம்பர் 2025, 8:49 AM