ஷா ஆலம், செப்.11 - உயர்கல்விக்கூட மாணவியான மணிஷாப்ரீத் கவுர் அகாராவை கொலை செய்தது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 19 வயது காதல் ஜோடிக்கு எதிரான வழக்கை ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
துணை அரசு வழக்கறிஞர் ராஜா ஜைசுல் பரிடா ராஜா ஜஹாருடின் செய்து கொண்ட விண்ணப்பத்தை ஏற்று மாஜிஸ்திரேட் கைரத்துல் அனிமா ஜெலானி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி இரவு 9.11 மணிக்கும் 11.31 மணிக்கும் இடையே சைபர்ஜெயாவில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் 20 வயதான மணிஷாப்ரியத்தை கொலை செய்ததாக வேலையில்லாத நபரான எம். ஸ்ரீ டார்வின் மீது
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை அல்லது அதிகபட்சமாக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதரிநோக்கியுள்ளார்.
அதே குடியிருப்பில், அதே தேதியில் மதியம் 12.30 மணிக்கு அந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவரின் காதல் ஜோடியும் கொலையுண்டவரின் வீட்டுத் தோழியுமான வி.டி. தினேஸ்வரி மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் 109 மற்றும் 302வது பிரிவுகளின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார். இப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இணையான தண்டனையை விதிக்கப்படும்.
சரவாக்கைச் சேர்ந்த இளங்கலை பிசியோதெரபி மாணவியான மணிஷாப்ரீத் கடந்த ஜூன் 24 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் சைபர்ஜெயாவில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஜோகூர் மற்றும் மலாக்காவில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் பல சந்தேக நபர்கள் போலீசாரா கைது செய்தனர்.
சைபர்ஜெயா உயர்கல்வி மாணவி கொலை வழக்கு ஷா ஆலம் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்
11 செப்டெம்பர் 2025, 8:36 AM