கோலாலம்பூர், செப் 11 — மலாயா பல்கலைக்கழகத்தில் (UM) புதிய மாணவர் சேர்க்கை, Unit Pusat Universiti (UPU) ஸ்கிரீனிங் செயல்முறை மற்றும் பல்கலைக்கழகத்தால் நிபந்தனைக்குட்பட்ட நேரடி சேர்க்கை மூலம் நடத்தப்படுகிறது என்று மலாயா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டத்தோஸ்ரீ நூர் அசுவான் அபு ஒஸ்மான் கூறுகிறார்.
மேல்முறையீட்டு காலம் முடிந்த பிறகு நிபந்தனைக்குட்பட்ட நேரடி சேர்க்கை வழங்கப்பட்டதாகவும், UPU போன்ற அதே முறையைப் பயன்படுத்தி மாணவர்கள் தரவரிசைப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த முறையின் மூலம் பல்கலைக்கழகம் 20 முதல் 50 இடங்களை வழங்கியது.
நிபந்தனைக்குட்பட்ட நேரடி சேர்க்கைக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
“நாங்கள் சுமார் 30 முதல் 50 மாணவர்களுக்கு இந்த சலுகைகளை வழங்குகிறோம், அதாவது அவர்கள் ஏற்கனவே தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளனர். இது ஒரு சாதாரண நடைமுறை, மேலும் இதன் தொடர்பான கடிதங்கள் மேல்முறையீட்டு காலத்திற்குப் பிறகுதான் வழங்கப்படுகின்றன.
“மேல்முறையீட்டு காலத்தில், சிறந்த மாணவ்ர்களை அடையாளம் காண 30 முதல் 50 மாணவர்கள் தரவரிசைப்படுத்தப்படுவார்கள். UPU பயன்படுத்தும் அதே அமைப்பின் அடிப்படையில் அவர்கள் தரவரிசைப்படுத்தப்படுகிறார்கள். "இறுதியில், நாங்கள் 30 முதல் 50 மாணவர்களை தேர்ந்தெடுப்போம். அதன் மொத்த எண்ணிக்கை 150 அல்லது 160ஆக இருக்கும்," என்று அவர் நேற்று புத்ராஜெயாவில் நடந்த ஒரு சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
4.00 என்ற ஒட்டுமொத்த தரப் புள்ளி சராசரி (CGPA) மற்றும் 9.90 என்ற புறப்பாடப் பாடத்திட்ட மதிப்பெண் பெற்ற போதிலும், மலாயா பல்கலைக்கழகத்தில் கணக்கியல் துறையில் தனக்கு இடம் வழங்கப்படவில்லை என்று கூறி STPM மாணவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவர் கருத்து தெரிவித்தார்.
அந்த புகாரைத் தொடர்ந்து, சில தரப்பினர் மலாயா பல்கலைக்கத்தில் இந்தத் திட்டத்திற்கு UPU வழங்கிய இடங்களின் எண்ணிக்கையும், உருவாக்கப்பட்ட பட்டதாரிகளின் இறுதி எண்ணிக்கையும் முரண்படுவதாகக் கூறினர்.
மேலும் கருத்து தெரிவித்த நூர் அசுவான், உயர்கல்வித் துறை இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் டத்தோ டாக்டர் அஸ்லிண்டா அஸ்மான் கூறியது போல், மலாயா பல்கலைக்கழகத்தில் கணக்கியல் துறைக்கு 85 இடங்களின் எண்ணிக்கை துல்லியமானது என்று கூறினார்.
எஸ்.டி.எம், மெட்ரிகுலேஷன் ஃபவுண்டேஷன்; டிப்ளோமா, மலாயா பல்கலைக்கழகத்திலிருந்து ஃபீடர் வேட்பாளர்கள் என விண்ணப்பதாரர்கள் வகை இருப்பதாக அவர் விளக்கினார்.
அதனால், தற்போதைய UPU அமைப்பு அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு தகுதிக் கொள்கையைப் பயன்படுத்து பொருத்தமானதாகவே உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.