கோலாலம்பூர், செப். 11 - விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கும் சிலாங்கூர் அரசின் 2026 பட்ஜெட், முதலாவது சிலாங்கூர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு பாலமாக செயல்படும் அதே வேளையில் அடுத்தாண்டு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் இரண்டாவது சிலாங்கூர் திட்டத்திற்கு அடித்தளமாகவும் அமையும்.
எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 50,000 கோடி வெள்ளி பொருளாதாரத்தை அடையும் இலக்கை நோக்கி சிலாங்கூர் செல்வதால் அதன் நீண்டகால வளர்ச்சி வியூகத்தில் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கு இந்த மாற்றம் மிகவும் முக்கியமானது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இது முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் முடிவையும் இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. ஆகவேதான் நாம் அதை (பட்ஜெட்டை) இன்னும் விரிவான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.
அது பொருளாதார கட்டமைப்பாக இருந்தாலும் சமூக கட்டமைப்பாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் அல்லது தேசம் மற்றும் மாநில நிர்வாகமாக இருந்தாலும் பெரிய துணிச்சலான மற்றும் தெளிவான கட்டமைப்புடன் அணுகும் பட்சத்தில் மக்கள் மற்றும் சந்தை இரு தரப்பினரிடமும் நம்பிக்கையை வளர்க்க முடியும் என்று இன்று சைம் டார்பி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2026 சிலாங்கூர் பட்ஜெட் கலந்துரையாடல் அமர்வில் ஆற்றிய தொடக்க உரையில் அவர் கூறினார்.
சிலாங்கூரின் பலம் இயற்கை வளங்களில் இல்லை என்றும் மாறாக, அதன் மனித மூலதனம் மற்றும் கேந்திர முக்கியத்துவ இருப்பிடத்தில் உள்ளது என்றும் அமிருடின் வலியுறுத்தினார். இந்த கூறுகள் நல்லாட்சி மற்றும் நிலையான கொள்கைகளால் வலுப்படுத்தப்பட வேண்டும்.
ஒரு வலுவான மற்றும் நிலையான அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டு விவேகமான, கவனமான மற்றும் நேர்மையான நிர்வாகத்துடன் மனித மூலதனத்தை திறம்பட திரட்ட முடிந்தால் அது நமது வெற்றிக்கு ஒரு முக்கியமான செயல்முறையாக இருக்கும்.
உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதிலும் சாத்தியமான நெருக்கடிகளைத் தவிர்க்க நிலைத்தன்மையைப் பாதுகாப்பதிலும் அரசு முனைப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.