ad

பாலியில் வெள்ளம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒன்பது பேராக உயர்வு

11 செப்டெம்பர் 2025, 6:55 AM
பாலியில் வெள்ளம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒன்பது பேராக உயர்வு

ஜாகர்த்தா, செப் 11 - இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தீவான பாலியில் இந்த வாரம்  ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது ஒன்பது பேர் பலியானதோடு மேலும்  600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெள்ளம் காரணமாக தலைநகரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து  தடைபட்டுள்ளதோடு அந்த பரபரப்பான சுற்றுலாத்  தலமும்  பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முதல் தொடர்ந்து பெய்த கனமழையால் பாலி தலைநகர் டென்பசாரில் வெள்ளம்  ஏற்பட்டு ஐந்து பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பேரிடர் தணிப்பு அமைப்பின்  பேச்சாளர்  அப்துல் முஹாரி
ஓர் அறிக்கையில் கூறினார்.

ஜெம்பிரானா, கியான்யார் மற்றும் பாடோங்  ஆகிய பகுதிகளில் மேலும் நான்கு பேர் வெள்ளத்திற்கு  பலியாகியதோடு  இருவரை இன்னும் காணவில்லை என்று அப்துல் மேலும் கூறினார்.

வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 600 பேரில் சுமார்  200 பேர் பள்ளிகள் மற்றும் பள்ளிவாசல்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

டென்பசாரில்  உள்ள இரண்டு கட்டிடங்கள் வெள்ளம் காரணமாக  இடிந்து விழுந்ததாகப்
பாலி தீவின் தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் ஐ நியோமன் சிடகார்யா தெரிவித்தார்.

டென்பசருக்கு அருகிலுள்ள  அனைத்துலக  விமான நிலையத்திற்கு செல்லும் சாலையை  லோரிகள் மட்டுமே  பயன்படுத்த முடியும் என்று அவர் மேலும் கூறினார்

முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை
ராய்ட்டர்ஸ் நிறுவனத்தால் உறுதிபடுத்த  முடியாத சமூக ஊடக காணொளிகள்  காட்டின.  பாதிக்கப்பட்ட பகுதிக்கு சுமார் 200 மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக நியோமன் கூறினார்.

இந்தோனேசியாவின் கிழக்கு நூசா தெங்காராவிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகப்
பேரிடர் தணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய அதிபர்  பிரபோவோ சுபியாந்தோ  பாதிக்கப்பட்டவர்களுக்கு  தனது இரங்கலைத் தெரிவித்தோடு அவசரகால நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கி மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யயும்படி  தேசிய பேரிடர் முகமையின் தலைவருக்கு உத்தரவிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.