சிரம்பான், செப். 11- இவ்வட்டாரத்திலுள்ள வீடுகளில் கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆயுதமேந்தி கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கும்பலைச் சேர்ந்த ஐந்து ஆடவர்கள் மற்றும் இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் மொத்தம் 70,000 வெள்ளிஇழப்பு ஏற்பட்டதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹூசேன் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி போர்ட்டிக்சன்,
புக்கிட் பெலாண்டோக் மற்றும் அம்பாங்கில் மேற்கொள்ளப்பட்ட சுமார் இரண்டு மணி நேர நடவடிக்கையின் போது நெகிரி செம்பிலான் மாநில குற்றப் புலனாய்வுப் பிரிவால் சுமார் 30 வயதுடைய அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அனைத்து ஆண் சந்தேக நபர்களும் குற்றச் செயல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான கடந்த கால பதிவுகளைக் கொண்டிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் இரு பெண்களுக்கும் எந்த கடந்த கால பதிவுகளும் இல்லை என அவர் சொன்னார்.
ஜன்னல்கள் வழியாக வீடுகளுக்குள் நுழைந்து பாதிக்கப்பட்டவர்களை கத்திகளைப் பயன்படுத்தித் தாக்கி, நகைகள், கைப்பேசி மற்றும் பணம் போன்ற மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையிடுவது இக்கும்பலின் பாணியாகும் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் 395/397, 412, 414 மற்றும் பிரிவு 457வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
ஆயுதமேந்திய கொள்ளைக் கும்பல் முறியடிப்பு - இரு பெண்கள் உள்பட எழுவர் கைது
11 செப்டெம்பர் 2025, 5:55 AM