பேங்காக், செப் 11 - பேங்காக்கில் உயிரியல் பூங்கா பராமரிப்பாளர் ஒருவரை பார்வையாளர்கள் முன்னிலையில் சிங்கங்கள் கடித்துக் குதறிய சம்பவம் சுற்றுவட்டாரத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தில் அந்த பராமரிப்பாளர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பூங்காவில் தனது காரிலிருந்து கீழே இறங்கிய அந்த பராமரிப்பாளர் மீது ஆறு முதல் ஏழு சிங்கங்கள் தாக்குதல் நடத்தின.
ஆசியாவின் மிகப்பெரிய திறந்தவெளி உயிரியல் பூங்காக்களில் ஒன்றான ``Safari World Bangkok``இல் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
ஒரு நபருக்கு சுமார் 1,200 பாட் அல்லது 159 ரிங்கிட் விலையில் சிங்கம் மற்றும் புலிக்கு உணவளிக்கும் நடவடிக்கைகளை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு அந்த உயிரியல் பூங்கா வாய்ப்பை வழங்குகிறது.
மரணம் அடைந்தவர் சிங்கங்களுக்கு உணவளிக்கும் அந்த உயிரியல் பூங்காவின் ஊழியர் என்று தேசிய பூங்காக்கள், வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்புத் துறையின் பாதுகாப்பு இயக்குநர் சடுடி புன்புக்டி கூறினார்.
ஒரு மனிதர் திறந்த காரில் இருந்து இறங்கி, அந்த விலங்கிற்கு முதுகைக் காட்டி தனியாக நின்ற செயல் மிகவும் விசித்திரமாக இருந்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பார்வையாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.
அந்த பூங்காவில் உள்ள அனைத்து சிங்கங்களுக்கும் உரிமம் இருப்பதாக அடையாளம் கூறப்படாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.