கோலாலம்பூர், செப். 11 - நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் அந்நிய நாட்டினரை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 18 அமலாக்க நிறுவன அதிகாரிகள் உட்பட 27 நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது.
சிலாங்கூர், மலாக்கா, கோலாலம்பூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 20 முதல் 50 வயதுக்குட்பட்ட 19 ஆடவர்கள் மற்றும் எட்டு பெண்கள் கைது செய்யப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
'கவுண்டர் செட்டிங்' எனும் நடவடிக்கையில் ஈடுபடாடதற்காக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் வெளிநாட்டினரை நாட்டிற்குள் நுழைவதற்கு உதவி செய்ததற்காக லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது.
இந்த சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து எம் ஏ.சி.சி. 200,000 வெள்ளிக்கும் அதிகமான ரொக்கம், நகைகள், தங்கக் கட்டிகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆடம்பர கைப்பைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களையும் பறிமுதல் செய்தது என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக 34 தனி நபர்களின் கணக்குகள் மற்றும் ஆறு நிறுவனக் கணக்குகளை உள்ளடக்கிய 40 வங்கிக் கணக்குகளை எம்.ஏ.சி.சி. முடக்கியுள்ளதாகவும் அவற்றின் மதிப்பு 10 லட்சம் வெள்ளிக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
எம்.ஏ.சி.சி. நேற்று காலை ஷா ஆலம், மலாக்கா, சிரம்பான் மற்றும் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் தடுப்புக் காவல் விண்ணப்பங்களை தாக்கல் செய்தது. அனைத்து சந்தேக நபர்களும் இப்போது தொடங்கி செப்டம்பர் 12 முதல் 16 வரை அதாவது மூன்று முதல் ஏழு நாட்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அமலாக்க நிறுவனங்களின் 18 அதிகாரிகள் தவிர ஐந்து நிறுவன உரிமையாளர்கள், ஒரு நிறுவன மேலாளர் மற்றும் மூன்று பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
அந்நியர்களை நாட்டிற்குள் சட்டவிரோதமாக அனுமதிக்கும் கும்பல் முறியடிப்பு- 27 பேர் கைது
11 செப்டெம்பர் 2025, 2:24 AM