ad

நேபாளத்தில் கலவரம் - வீடுகளில் தொடர்ந்து தங்கியிருக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

11 செப்டெம்பர் 2025, 2:20 AM
நேபாளத்தில் கலவரம் - வீடுகளில் தொடர்ந்து தங்கியிருக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

கோலாலம்பூர், செப். 11 - நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு  நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் தலைநகரான காட்மாண்டுவில் உள்ள மலேசியர்கள் மறு அறிவிப்பு வரும் வரை வீட்டிலேயே இருக்குமாறு அங்குள்ள மலேசிய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

நேபாள அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவை நாளை காலை 6 மணி வரை நீட்டித்துள்ளதாகவும் திரிபுவன் அனைத்துலக  விமான நிலையம் நாளை
மாலை 6.00 மணி வரை மூடப்படும் என்றும் தூதரகம் தனது முகநூல்  பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.

நிலைமை மேம்படும் வரை காட்மாண்டுவில் உள்ள அனைத்து மலேசியர்களும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தூதரக உதவி தேவைப்படுவோர் காட்மாண்டுவில் உள்ள மலேசிய தூதரகத்தை +977-1-5445680 அல்லது 980 100 8000 என்ற எண்கள் வழி அல்லது
[email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இதற்கிடையில், நேபாள ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்த மலேசியர்கள் விமான நிலையம் மூடப்பட்டதன் காரணமாக விமான பயண அட்டவணையை மாற்றுவதற்காக விமான நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துலக முன்பதிவுகளுக்கு பயணிகள் 9843647125, 9841962064 அல்லது 9851055357 என்ற எண்களில் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

அனைத்துலக விமான டிக்கெட் விற்பனை தொடர்பான விஷயங்களுக்கு நேபாள ஏர்லைன்ஸை 9851062802, 9849830904 அல்லது 9844540277 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நேபாளத்தில் உள்ள மலேசியர்கள் விழிப்புடனும்  வீட்டுக்குள்ளும் இருக்கும் அதேவேளையில் உள்ளூர் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பின்பற்றி நடக்கும்படியும்  தூதரகம் நினைவூட்டுகிறது.

பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கத்தை கவிழ்த்த மக்கள்  போராட்டம் நிகழ்ந்த
ஒரு நாள் கழித்து  நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருந்ததால் நேபாள இராணுவம் "தடை உத்தரவை" அமல்படுத்தியுள்ளதாக  உள்ளூர் ஊடகத்தை  மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்ததில் கடந்த  திங்கட்கிழமை முதல் குறைந்தது 20 போராட்டக்காரர்கள் குறிப்பாக  இளைஞர்கள் கொல்லப்பட்டதோடு கிட்டத்தட்ட 350 பேர் காயமடைந்துள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.