ad

பூமிபுத்ரா மக்கள்தொகையின் அதிகரிப்பு நாட்டின் பன்முகத்தன்மையை பாதிக்காது

11 செப்டெம்பர் 2025, 2:04 AM
பூமிபுத்ரா மக்கள்தொகையின் அதிகரிப்பு நாட்டின் பன்முகத்தன்மையை பாதிக்காது

மலேசியாவின் பூமிபுத்ரா மக்கள்தொகையின் அதிகரிப்பு, தேசிய ஒற்றுமையையோ அல்லது நாட்டின் பன்முக இனக் கட்டமைப்பையோ பாதிக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சமூக நிபுணர் ஒருவர், சிறுபான்மையினர் அதிருப்தியடையாமல் இருக்க அரசு சமநிலை கொண்ட கொள்கைகளை வகுப்பது மிகவும் முக்கியம் என்று வலியுறுத்துகிறார்.

பூமிபுத்ராக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், பிற இனங்களின் தேவைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுடன் இணைந்து செல்ல வேண்டும். இல்லையெனில், சமூக ஒற்றுமையில் பிளவுகள் தோன்றும் அபாயம் இருக்கிறது என மலேசிய தகுதி முகாம் (MQA) தலைமைச் செயல் அதிகாரி டத்தோ முகமட் ஷாதார் சப்ரான் கூறினார்.

“1959-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து, பூமிபுத்ராக்கள் சீனர்கள், இந்தியர்கள் போன்ற பிற இனங்களைவிட அதிகமான எண்ணிக்கை கொண்டுள்ளனர். இன்று வரை அதே நிலை தொடர்ந்தாலும், அமைதியும் ஒற்றுமையும் நிலைத்திருக்கிறது.

“ருகுன் நெகாரா மற்றும் கூட்டாட்சி அரசியலமைப்பு ஆகியவை எப்போதும் நம்மை வழிநடத்தியுள்ளன. இவ்விரண்டையும் மதிப்பதால், யாரும் மலேசியாவின் அமைதியையும் வளர்ச்சியையும் குலைக்கக் கூடிய பிரச்சனைகளை தூண்ட முயற்சி செய்யவில்லை,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

மலேசிய புள்ளிவிவரத் துறை (DOSM) ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு வெளியிட்ட மக்கள் தொகை கணிப்பு 2020-2060 அறிக்கையின்படி, பூமிபுத்ரா மக்கள்தொகை 2020-ஆம் ஆண்டின் 69.4 சதவீதத்திலிருந்து 2060-ஆம் ஆண்டில் 79.4 சதவீதமாக உயரும் என தெரிவிக்கப்பட்டது.

மாறாக, சீனர்களின் மக்கள் தொகை 23.2 சதவீதத்திலிருந்து 14.8 சதவீதமாகவும், இந்தியர்களின் மக்கள் தொகை 6.7 சதவீதத்திலிருந்து 4.7 சதவீதமாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூரிலும் இதே போக்கு காணப்படுகிறது. பூமிபுத்ரா மக்கள் தொகை 2020-இல் 60.6 சதவீதத்திலிருந்து 2060-இல் 69.9 சதவீதமாக உயரும். அதே நேரத்தில், சீனர்கள் 27.3 சதவீதத்திலிருந்து 20.3 சதவீதமாகவும், இந்தியர்களின் எண்ணிக்கை 11.3 சதவீதத்திலிருந்து 8.6 சதவீதமாகவும் குறையும்.

ஒற்றுமைக்கான சமநிலை கொண்ட கொள்கைகள்

அடுத்த காலங்களில் அரசு எடுக்கும் அனைத்து சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தீர்மானங்களும் இன சமநிலையை கருத்தில் கொண்டு நியாயமாக அமல்படுத்தப்பட வேண்டும் என ஷாதார் கூறினார். இது பூமிபுத்ரா சிறப்பு உரிமைகளை புறக்கணிக்காது; அதே நேரத்தில், சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன்களையும் உறுதிப்படுத்தும்.

“ஒவ்வொரு இனக் குழுவும் மற்றவர்களை சுரண்டாமல் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, A, B-ஐ சுரண்டக்கூடாது; B, C-ஐ சுரண்டக்கூடாது என்றார்.

“அதிக எண்ணிக்கை கொண்டது வலிமையானது என்று அர்த்தமில்லை; குறைவானது பலவீனமானது என்றும் அர்த்தமில்லை. சமநிலை இருக்க வேண்டும். சுதந்திரத்திலிருந்து நாம் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். ஆகவே, பூமிபுத்ரா மக்கள் தொகை அதிகரித்தாலும் கவலைப்பட தேவையில்லை. நாம் ஒருவருக்கொருவர் மதித்தால் பிரச்சனை இருக்காது,” என்றார்.

மேலும் சமூக ஊடகங்களில் இனவாதத்தை தூண்டும் வகையில் இடப்பெறும் பதிவுகளை அரசு தொடர்ந்து மற்றும் கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார்.

“1940-களிலிருந்து 1990-கள்வரை, ஊடகங்களில் வெளிவரும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த முடிந்தது. பெரும்பாலும் அவை அச்சு வடிவிலேயே இருந்ததால், ஒழுங்கற்ற உள்ளடக்கங்களை எளிதில் தடுப்பது சாத்தியமாக இருந்தது.

“இன்று அது கடினம். ஆகவே, சமூக ஊடகங்களில் கடுமையான கண்காணிப்பும் கட்டுப்பாடும் தேவை. வெளிநாடுகளில் நடக்கும் சம்பவங்களை பயன்படுத்தி, நம் நாட்டுக்குள் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக சில தரப்புகள் பிரச்சனையை தூண்டுகிறார்கள்,” என்றார் அவர்.

இதேவேளை, இளைஞர்கள் குழந்தைகள் இல்லாமல் வாழ்வது அல்லது குழந்தைகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் போக்கு சாதாரணமாகக் கருத வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார். இது மலேசியாவின் செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.

“சீனா ஒருகாலத்தில் ஒரே குழந்தை அல்லது இரண்டு குழந்தைகள் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தியது. ஆனால் இன்று அந்த கொள்கையை மாற்றியுள்ளது. சிங்கப்பூரும் அதையே செய்துள்ளது.

“ஏனெனில், அவர்கள் அதிகமான மக்கள் தொகை தேவையை உணர்ந்துள்ளனர்,” என்று அந்த நிபுணர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.