அம்பாங் ஜெயா, செப் 10 - கம்போங் தாசேக் தம்பஹானில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களின் அவலநிலை சிலாங்கூர் மந்திரி புசார் அறக்கட்டளையின் கவனத்தைப் பெற்றுள்ளது.
தீ விபத்து, வெள்ளம் மற்றும் புயல் உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பத்து லட்சம் வெள்ளி நிதியை இந்த தொண்டு நிறுவனம் பயன்படுத்தி வருவதாக அதன் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.
கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களுக்கு இன்று நாங்கள் நன்கொடை வழங்குகிறோம். பாதிக்கப்பட்டவருக்கு உதவ மொத்தம் 12,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ள வேளையில் ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா 3,000 வெள்ளி வழங்கப்படுகிறது என அவர் சொன்னார்.
பேரிடர் நிவாரணத்திற்காக ஆண்டுதோறும் பத்து லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுவரை பல்வேறு பேரிடர்களுக்கு 650,000 வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீ விபத்துகள் அதிகம் ஏற்பட்டுள்ளன என்பதை பதிவுகள் காட்டுகின்றன என்று அவர் கூறினார்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களுக்கு நன்கொடைகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் சைட் அகமது சைட் அப்துல் ரஹ்மான் அல்ஹாடாட் கலந்து கொண்டார்.
முன்னதாக, தெராத்தாய் தொகுதியில் பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எட்டு பேருக்கு மொத்தம் 4,000 ஒதுக்கீட்டில் சக்கர நாற்காலி உதவியையும் அகமது அஸ்ரி வழங்கினார்.
இதற்கிடையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட அலுவலகம் மற்றும் சமூக நலத்துறையிலிருந்து உதவிக்கான விண்ணப்பத்தின் சமீபத்திய மேம்பாடு குறித்த தகவல்களை தமது தரப்பு பெற்று வருவதாக அல்டிமெட் என்று அழைக்கப்படும் சைட் அகமது
தெரிவித்தார்.