ஜோகூர் பாரு, செப். 9 - சமையல் எண்ணெய் விலை நிலைத்தன்மைத் திட்டம் (eCOSS) கைப்பேசி செயலியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவதால் விவேக கைப்பேசி இல்லாத பயனீட்டாளர்கள் மானிய விலையில் சமையல் எண்ணெயைப் பெறுவதை கடினமாகிவிடும் என்ற கூற்றை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு மறுத்துள்ளது.
கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேனிங் செய்வதன் மூலம் செயலியைப் பயன்படுத்தும் அதேவேளையில் பதிவு புத்தகம் வழியாகவும் பயனீட்டாளர்கள் விபரங்களைப் பதிவு செய்யலாம் என்று அதன் ஜோகூர் மாநில அமலாக்க இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமோ கூறினார்.
கைப்பேசி இல்லாத பயனீட்டாளர்கள் மானிய விலையில் சமையல் எண்ணெயை சட்டப்பூர்வமாகவும் முறையாகவும் பெற அனுமதிக்கும் வகையில் கையேடு பதிவு வழங்கப்படுகிறது.
இந்த முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாக அதன் சுமூகமான அமலாக்கத்தை உறுதி செய்வதற்காக நாங்கள் பல்பொருள் வர்த்தக மையங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம்.
மேலும், இந்த செயல்முறை சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக பயனீட்டாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பல்பொருள் அங்காடிகளில் 'பயிற்சியாளர்களுக்கான பயிற்சி' அமர்விற்காக அமர்த்தப்பட்ட எங்கள் அதிகாரிகள் விற்பனையின் முதல் ஐந்து நாட்கள் முழுவதும் முகப்பிடங்களில் இருப்பார்கள் என்று லிலிஸ் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து
இதுவரை 111,480 கொள்முதல் பரிவர்த்தனைகள் eCOSS செயலி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் 47,141 கொள்முதல் பரிவர்த்தனைகள் பதிவு புத்தகம் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரண்டு கொள்முதல் முறைகளும் சிறப்பாக செயல்படுகின்றன என்பதையும் பயனீட்டாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் இந்த எண்ணிக்கை நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.