ஷா ஆலம், செப். 9 - நீண்ட காலமாக நிலவி வரும் புக்கிட் லஞ்சான், டேசா அமான் புரி சாலை நெரிசல் பிரச்சனையை சிலாங்கூர் அரசு அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
எந்தவொரு பிரச்சனையும் தீர்வு காண்பதற்கு அதிக காலம் எடுக்காமல் இருக்க மாநில அரசு ஓர் அளவுகோலை நிர்ணயித்துள்ளதாக மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் சைபுடின் ஷாபி முகமது கூறினார்.
ஆய்வுகளை காரணம் காட்டி இந்தப் பிரச்சினையைத் தள்ளிப்போட முடியாது. தீர்வு காணப்படுவதற்கு முன்பு எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும்? என அவர் கேள்வியெழுப்பினார்.
துரதிர்ஷ்டவசமாக, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்த சாலை ஒருபோதும் மேம்படுத்தப்படவில்லை. மக்களின் குறைகளை இவ்வளவு காலம் எப்படி மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை என்று சைபுடின் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நீண்ட காலமாக நீடித்து வரும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங், ஊராட்சி மன்ற அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அந்த இடத்தில் வாகன நெரிசல் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக செலாயாங் நகராண்மைக் கழகம் அறிவித்தது.
சாலையை மேம்படுத்துவதற்கான திட்டங்களின் மேம்பாட்டை மதிப்பிடுவதற்காக இரண்டு மாதங்களில் அடுத்த கூட்டத்திலும் இந்த விஷயம் மீண்டும் எழுப்பப்படும் என்று சைபுடின் நினைவுறுத்தினார்.