கப்பளா பத்தாஸ், செப். 9 - சிலாங்கூரில் உள்ள மாநில அரசு துணை நிறுவனங்கள், துறைகள், முகமைகள் மற்றும் ஊராட்சி மன்றங்களின் பொது உறவு அதிகாரிகள் கருத்துகளுக்கு பதில் வழங்குவதிலும் அரசாங்கக் கொள்கைகளை மக்களுக்குத் தெரிவிப்பதிலும் மிகவும் பொறுப்புணர்வுடனும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் தகவல் தொடர்புகளை ஒருங்கிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மக்கள் தொடர்பு அதிகாரிகள் தகவல் தொடர்பு உலகில் ஏற்படும் மாற்றங்களை, குறிப்பாக சமூக ஊடகப் பயன்பாட்டில் காணப்படும் மாறுதல்களை அறிந்திருக்க வேண்டும் என்பதோடு அவற்றை பின்பற்றவும் வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சில நேரங்களில் நிறைய செய்திகள் (உண்மையற்ற மற்றும் எதிர்மறையான) சமூக ஊடகப் பதிவுகள் மூலம் சீக்கிரமே பரவுகின்றன. எனவே, அவர்கள் (பொது உறவு அதிகாரிகள்) மாறிவரும் சூழலை பற்றி அறிந்திருக்க வேண்டும். பகைமை போக்குடன் அல்லாமல் அவற்றை எவ்வாறு கிரகித்து கொள்வது என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றார் அவர்.
மாநிலத்தின் கொள்கைகள் மற்றும் கருத்துக்களை முன்னிலைப்படுத்துவதில் பயனுள்ள தகவல் தொடர்புகளை அவர்கள் எவ்வாறு திட்டமிட முடியும் என்பதுதான் முக்கியம் என்று அவர் கூறினார்.
இன்று இங்குள்ள பொழுதுபோக்கு மையம் நடைபெற்ற 2025 சிலாங்கூர் மக்கள் தொடர்பு மற்றும் ஊடக அதிகாரிகளின் கலந்துரையாடல் மற்றும் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், முதல் முறையாக ஊடகங்களின் பங்கேற்புடன் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் எளிதாக்கும் மாநில அரசின் முயற்சிகளில் ஒன்றாக விளங்குகிறது என சொன்னார்.
குறிப்பாக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் கொள்கைகளையும் மக்களுக்கு வழங்குவதில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று அமிருடின் கூறினார்.
சமூக ஊடகங்கள் தகவல் தொடர்பு உலகத்தை ஆக்கிரமித்துள்ள போதிலும் பிரதான ஊடகங்கள் இன்னும் குறிப்பிடக்கூடிய ஒரு ஆதாரமாக முக்கிய பங்கை வகிக்கின்றன என்று அவர் சொன்னார்.
பொது உறவு அதிகாரிகள் சமூக ஊடகங்களில் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும் - மந்திரி புசார்
9 செப்டெம்பர் 2025, 5:42 AM