பெட்டாலிங் ஜெயா, செப் 8 - உள்ளூர் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் திறனை வளர்க்க, சிறப்பு பயிற்சிகளை ஏற்பாடு செய்ய தேசிய விளையாட்டு சங்கங்கள் (NSA) முன்வர வேண்டும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ வலியுறுத்தினார்.
மேலும், நிதியுதவி மூலம் ஆதரிக்கப்படும் இத்தகைய பயிற்சிகள் ஏற்கனவே பல விளையாட்டுகளுக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அதன் வரம்பு தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
"இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் (KBS) இந்த நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கியுள்ளது. ஆனால் அது பரவலாக விளம்பரப்படுத்தப்படவில்லை.
"உதாரணமாக, செபாக் தக்ரோ மற்றும் வுஷு ஆகியவை அதில் அடங்கும். அடுத்த ஆண்டும் இதேபோன்ற நிதியை நாங்கள் கோருவோம். இதனால் மற்ற விளையாட்டுகளும் இதுபோன்ற நன்மைகளைப் பெற முடியும்," என்று ஆஸ்திரேலிய ஸ்குவாஷ் ஜாம்பவான் டேவிட் பால்மர் ஏற்பாடு செய்த ஸ்குவாஷ் பயிற்சியை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, முன்னாள் உலக சாம்பியன் மலேசியாவில், குறிப்பாக உள்ளூர் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களிடையே விளையாட்டின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியில் நான்கு நாள் ஸ்குவாஷ் பயிற்சி நடத்தினார்.
சர்வதேச விளையாட்டு நிபுணர்களை நாட்டிற்கு அழைத்து வரும் முயற்சி குறிப்பாக வெளிநாடுகளில் பயிற்சி பெற வாய்ப்பு இல்லாதபோது, விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு பயனுள்ள உத்தி என்று யோ கூறினார்.