ஈப்போ, செப். 8 - கடந்த மாதம் நடைபெற்ற மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா மீது குற்றவியல் பலாத்காரத்தைப் பயன்படுத்தியதாகப் பெண் ஒருவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் முகமது ஹரித் முகமது மஸ்லான் முன்னிலையில் தனக்கெதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக 41 வயதான நூர்ஷஸ்வானி அஃப்னி முகமது சோர்கி தலையசைத்தார்.
இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஆகஸ்டு 31 ஆம் தேதி காலை 8.00 மணியளவில் ஜாலான் பங்லிமா புக்கிட் கந்தாங் வஹாப்பில் உள்ள ஈப்போ மாநகர் மன்ற கட்டிடத்திற்கு முன்னால் உள்ள பிரமாண்ட மேடையில் சுல்தான் நஸ்ரினைத் தாக்கியதாக அல்லது குற்றவியல் பலாத்காரத்தை பயன்படுத்தியதாக நூர்ஷாஸ்வானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை, 1,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும்
குற்றவியல் சட்டத்தின் 352 வது பிரிவின் கீழ் அம்மாது குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் நஸ்ருல் ஹாடி அப்துல் கானி, வாக்குமூலம் பதிவு செய்யாமல் குற்றச்சாட்டை மட்டும் வாசிக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 342வது பிரிவின் கீழ் நூர்ஷாஸ்வானியை தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள பஹாகியா உலு கிந்தா மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மனநல மதிப்பீடு மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்த நஸ்ருல் ஹாடி நீதிமன்றத்திடம் விண்ணப்பித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் மனோநிலையை சரிபார்க்கவும் வழக்கு விசாரணையை எதிர்கொள்வதற்கான அவரது தகுதியை தீர்மானிக்கவும் இந்த மதிப்பீடு அவசியம் என்று அவர் கூறினார்.
இந்த விண்ணப்பத்தை மாஜிஸ்திரேட் முகமது ஹரித் ஏற்றுக்கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக தேசிய சட்ட உதவி அறக்கட்டளையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம். சரவணன் ஆஜரானார்.