ஷா ஆலம், செப். 8 - போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் வருமானத்தை சட்டப்பூர்மாக்க போதைப்பொருள் கும்பல்கள் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் மற்றும் செயல்படாத நிறுவனங்களைப் பயன்படுத்துகின்றன என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹூசைன் ஓமார் கான் தெரிவித்தார்.
இத்தகைய தந்திரங்கள் சட்ட அமலாக்க முயற்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றன என்று நியு ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
ஏனெனில் இந்த நிதி, பல அடுக்கு பணப்பை முறையில் வைக்கப்பட்டு அல்லது வணிக பரிவர்த்தனை ரூபத்தில் சட்டப்பூர்வமாக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
டிஜிட்டல் சொத்துக்கள் பெயர் தெரியாத தன்மையும் எல்லையற்ற இயக்கத்தையும் பன்முகப்படுத்துதலையும் வழங்குகின்றன. பாரம்பரிய வங்கி மேற்பார்வை மூலம் சட்டவிரோதப் பண ஓட்டத்தை கண்டறிவதை இது மிகவும் கடினமாக்குகிறது என்று அவர் கூறினார்.
சட்டவிரோதப் பணத்தை சட்டப்பூர்மாக்குவதற்காக பெயரளவில் உருவாக்கப்பட்ட ஷெல் எனப்படும் செயல்படாத நிறுவனங்கள், உரிமையை மறைத்து சட்டப்பூர்வப் பாதுகாப்பை வழங்கி விசாரணை செயல்முறைகளை தாமதப்படுத்துகின்றன. மேலும், அமலாக்க நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க தடைகளை உருவாக்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
கிரிப்டோகரன்சிகளின் எல்லையற்ற தன்மைக்கு அனைத்துலக ஒத்துழைப்பு தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
பயனுள்ள அமலாக்கம் நாடுகளுக்கு இடையிலான நிகழ்நேர உளவுத்துறை பகிர்வைப் சார்ந்துள்ளது. அது இல்லாவிடில் குற்றவாளிகள் கவனிக்கத் தவறும் இடைவெளிகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று அவர் கூறினார்.
இந்தப் போக்கை நிவர்த்தி செய்ய மலேசியா அனைத்துலக அமலாக்க அமைப்புகள் மற்றும் நிதி புலனாய்வுப் பிரிவுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வரும் அதேவேளையில் போதைப்பொருள் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும் ஹூசேன் கூறினார்.
போதைப்பொருள் வருமானத்தை சட்டப்பூர்வமாக்க கிரிப்டோ கரன்சி - ஹூசேன் டத்தோ அம்பலம்
8 செப்டெம்பர் 2025, 9:58 AM