ஷா ஆலம், செப். 8 - எதிர்வரும் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர் அரசு, மாநில அளவிலான மாபெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
கிள்ளான், லிட்டில் இந்தியாவில் உள்ள செட்டி பாடாங்கில் நடைபெறவிருக்கும் இந்த தீபாவளி கொண்டாட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர்கள், சிலாங்கூர் போலீஸ் தலைமையகம் மற்றும் தென் கிள்ளான் மாவட்ட காவல் துறை பிரதிநிதிகள் கிள்ளான் மாவட்ட பொதுப்பணித் துறை, மாநகர் மன்றத்தின் நெறிமுறை மேலாண்மை பிரிவு மற்றும் இந்திய சமூகத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் அணுக்கமான ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளி கொண்டாட்டம் சுமூகமாகவும் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமை உணர்வுடனும் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறேன் என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் மாநிலத்தில் உள்ள பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தின் பண்பாட்டு அழகையும் இந்நிகழ்வு பிரதிபலிக்கும் தாம் நம்புவதாக அவர் கூறினார்.
மாநில அரசின் தீபாவளிக் கொண்டாட்டம்-பாப்பாராய்டு தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம்
8 செப்டெம்பர் 2025, 6:48 AM