கோலாலம்பூர், செப். 8 - பேரங்காடியின் நுழைவாயில் ஒன்றில் அதன் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் மரக் குச்சியை ஏந்திய வருகையாளருக்கும் இடையிலான உரையாடலை சித்தரிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் நேற்று முதல் பரவி வருவது குறித்து சூரியா கே.எல்.சி.சி. நிர்வாகம் நேற்று ஒரு விளக்கத்தை வழங்கியுள்ளது.
பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய அல்லது வருகையாளர்களின் அமைதிச் சூழலை சீர்குலைக்கும் பொருட்களை தடை செய்யும் நீண்டகால பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப பேரங்காடிக்குள் நீண்ட மரக் குச்சியைக் கொண்டு வர வேண்டாம் என்று அந்த வருகையாளர் கேட்டுக் கொள்ளப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
இது அனைத்து வருகையாளர்களுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு நிலையான பாதுகாப்பு நடவடிக்கை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்,
மேலும் எங்கள் நடவடிக்கை எந்த அரசியல் நிலைப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம் என்று அது கூறியது.
சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு பேரங்காடியின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்பதோடு அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் கட்டொழுங்கான சூழலைப் பராமரிக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வதால் பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் புரிதலை தாங்கள் பெரிதும் பாராட்டுவதாக அது மேலும் குறிப்பிட்டது.
வைரல் காணொளி - அரசியல் நோக்கத்தை சூரியா கே.எல்.சி.சி. மறுத்தது
8 செப்டெம்பர் 2025, 5:13 AM