ஷா ஆலம், செப். 8 - கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டிலான 12 வயதுக்கு கீழ்ப்பட்ட மாணவர்களுக்கான வெற்றியாளர் கிண்ண கால்பந்து போட்டி நேற்று ஷா ஆலம், செக்சன் 17, ஜே.கே.ஆர். அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இரண்டாம் ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியில் கோத்தா கெமுனிங் தொகுதியிலுள்ள தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்து 14 குழுக்கள் பங்கு கொண்டன.
ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் மித்ரா ஸ்போர்ஸ் அகாடமி ஆதரவில் கோத்தா கெமுனிங் சேவை மையம் இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கால்பந்துப் போட்டியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், இப்போட்டி வெறும் விளையாட்டை மட்டும் மையமாகக் கொண்டதல்ல. மாறாக, மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம், குழு மனப்பான்மை மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு தளமாகும் எனக் கூறினார்.
சிறு வயதிலிருந்தே மாணவர்களின் திறனை மேம்படுத்துவதில் மாநில அரசு மற்றும் வட்டார சமூகம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு இது சான்றாக விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
சிறார்கள் மற்றும் இளம் பருவத்தினர் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் "மிகவும் மதிப்புமிக்க சொத்துக்கள்". அவர்கள் வெற்று ஓவிய கேன்வாஸ் திரை போன்றவர்கள். அதற்கு நேர்மறை அனுபவங்கள் மற்றும் வழிகாட்டுதலுடன் வண்ணம் சேர்க்க வேண்டும் என அவர் சொன்னார்.
இந்த வயதிலுள்ளப் பிள்ளைகள் ஆற்றல் நிறைந்தவர்கள். அவர்கள் பார்க்கும், கேட்கும் மற்றும் அனுபவிக்கும் விஷயங்கள்தான் எதிர்காலத்தில் அவர்கள் யாராக இருப்பார்கள் என்பதை வடிவமைக்கும். எனவே, இந்தப் பொறுப்பை ஒரு தரப்பினரால் மட்டும் சுமக்க முடியாது.
இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசாங்கம் மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சிகள் தேவை என அவர் வலியுறுத்தினார்.
அடிமட்டத்திலிருந்து மனித மூலதன வளர்ச்சியை வளர்க்கும் ஒரு முன்மாதிரியான சமூகமாக மாற்றுவதற்கான கோத்தா கெமுனிங் தொகுதியின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக இந்தப் போட்டி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதாகப் பிரகாஷ் தெரிவித்தார்.
இப்போட்டியில் ஷா ஆலம், செக்சன் 27ஏ பள்ளி வெற்றியாளராக வாகை சூடியது. இரண்டாம் இடத்தை புக்கிட் கெமுனிங் தொடக்கப்பள்ளி இரண்டாவது இடத்தையும் கோத்தா கெமுனிங் தேசியப் பள்ளி மூன்றாவது இடத்தையும் தாமான் ஸ்ரீ மூடா 'பி' தேசியப்பள்ளி நான்காவது இடத்தையும் பிடித்தன.





