ஷா ஆலம், செப் 8 - இங்குள்ள ஐடியல் மாநாட்டு மையத்தில் (ஐ.டி.சி.சி.) நடைபெற்ற பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் (பெர்சத்து) ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் காவல்துறை விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தமது துறைக்கு நேற்று முன்தினம் இரவு12.18 மணிக்கு கட்சியின் பாதுகாப்புத் தலைவரிடமிருந்து புகார் கிடைத்ததாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.
பெர்சத்து தலைவர் டான் ஸ்ரீ மொஹிடின் யாசின் உரையாற்றிக் கொண்டிருந்த போது கட்சி உறுப்பினர்கள் இருவர் எழுந்து கூச்சலிட்டு தலைவரின் உரையை சீர்குலைப்பதை பணியில் இருந்த புகார்தாரர் கண்டதாக முகமது இக்பால் தெரிவித்தார்.
கூச்சலிட்டவர்களை அமைதிப்படுத்தும் நோக்கில் புகார்தாரர் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் எனினும் பின்னால் இருந்து இழுக்கப்பட்டதால் அவர் கீழே விழுந்து மண்டபத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டதாகவும் அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.
கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவ்விருவரையும் மண்டபத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர். பின்னர் கூட்டம் வழக்கம் போல் தொடர்ந்தது என்று இக்பால் கூறினார்.
இச்சம்பவத்தில் புகார்தாரர் அல்லது எந்தவொரு தரப்பினருக்கும் எந்த காயமும் சொத்துகளுக்கு சேதமும் ஏற்படவில்லை என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தகராற்றில் ஈடுபட்டதற்காக இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் 160வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது. இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது 1,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும், நூறு வெள்ளிக்கு மிகாமல் அபராதம் விதிக்க வகை செய்யும் சிறு குற்றச் சட்டத்தின் 14வது பிரிவின் கீழும் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என இக்பால் குறிப்பிட்டார்.
பெர்சத்து கட்சி ஆண்டுக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்- போலீஸ் விசாரணை
8 செப்டெம்பர் 2025, 2:49 AM