துவாரான், செப். 6- மாரா தொழில்திறன் பயிற்சிக் கல்லூரியின் (ஐ.கே.எம்) ஐந்து மாணவர்கள் இங்குள்ள ஜாலான் காயாங்கில் நேற்று நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்ததற்கு அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட பல்நோக்கு வாகனம் (எம்.பி.வி) அதிவேகமாக ஓட்டிச் செல்லப்பட்டதே காரணம் எனக் கூறப்படுகிறது.
அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கற்களை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது ஆரம்பகட்ட போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டதாக துவாரான் மாவட்ட காவல்துறைத் தலைவர் நோரைடின் அக் மைடின் தெரிவித்தார்.
கோத்தா கினாபாலுவிலிருந்து கோத்தா பெலுட் நோக்கி பயணித்த அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த் தடத்தில் நுழைந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக துவாரான் திசையிலிருந்து கோத்தா கினாபாலு நோக்கி கற்களை ஏற்றிச் சென்ற லாரி மீது அந்த எம்.பி.வி. மோதியது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட அனைவரையும் துவாரான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்கள் வெற்றிகரமாக மீட்டனர். பின்னர் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக துவாரான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன என்று அவர் கூறினார்.
இந்த விபத்து தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், விசாரணைக்கு உதவுவதற்காக பல நபர்களின் வாக்குமூலங்களை காவல்துறை பதிவு செய்துள்ளதாகச் சொன்னார்.