கோலாலம்பூர், செப். 6- இந்தோனேசியாவில் நிகழ்ந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்று மலேசியாவும் இதர ஆசியான் நாடுகளும் நம்புவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின் போது, இந்தோனேசியாவில் நிலைமை தற்போது மேம்பாடு கண்டு வருகிறது என அக்குடியரசின் அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தம்மிடம் தெரிவித்ததாக அன்வார் குறிப்பிட்டார்.
இந்தோனேசியா ஒரு ஆசியான் உறுப்பு நாடு மட்டுமல்ல. ஒரு நண்பராகவும் குடும்பமாகவும் இருப்பதால் அதன் நன்மைக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று அவர் சொன்னார்.
பண்டார் பாரு ஸ்ரீ பெட்டாலிங் ஜாமேக் பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற கூட்டரசு பிரதேச முப்தி துறையின் 'தெமு மெஸ்ரா' நட்புறவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
மத்திய ஜகார்த்தா பகுதியில் உள்ள செனாயன் பகுதியில் நடந்த தொடர் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து சமீபத்திய நிலவரங்களை அணுக்கமாக கண்காணித்து வருவதாக ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகம் கடந்த வெள்ளிக்கிழமை கூறியது.
இதற்கிடையில், தாய்லாந்தில் விரைவில் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று மலேசியாவும் நம்புவதாக அன்வார் தெரிவித்தார்.
அனைத்தும் சரியாகிவிட்டால் நான் அவர்களைத் தொடர்பு கொள்வேன் என்று அவர் கூறினார்.
கடந்த வாரம் பேடோங்டர்ன் ஷினவத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தாய்லாந்து பிரதிநிதிகள் சபை இன்று புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பை நடத்தும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது
இந்தோனேசியாவில் ஆர்ப்பாட்டம் விரைவில் முடிவுக்கு வரும்- மலேசியா, ஆசியான் நம்பிக்கை
6 செப்டெம்பர் 2025, 9:31 AM