சிரம்பான், செப். 5- போர்ட்டிக்சனின் தஞ்சோங் அகாஸில் உள்ள லிங்கி ஆற்றில் கார் விழுந்ததில் இரு சிறார்கள் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு உதவுவும் பொருட்டு ஒரு ஆடவரும் அவரின் காதலியும் இன்று முதல் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர்.
உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை என்று நம்பப்படும் 46 வயது உள்ளூர் நபருக்கும் 41 வயது பெண்ணுக்கும் எதிரான தடுப்புக் காவல் உத்தரவை உதவிப் பதிவாளர் நூருல் ஃபர்ஹா சுலைமான் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிறப்பித்ததாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது தெரிவித்தார்.
தண்டனைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் மேலும் விசாரணையை மேற்கொள்ளும் நோக்கில் இந்த தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டதாக என்று அவர் இன்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர், எனினும், நேற்றிரவு 8.00 மணிக்கு போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்ட சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களிடமிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
சந்தேக நபர்களிடமிருந்து அல்லாமல் பொதுமக்களிடம் இருந்துதான் எங்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே, சம்பவத்திற்கான காரணத்தை இன்னும் எங்களால் கண்டறிய முடியவில்லை. அது இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக, நேற்று காலை 11.45 மணியளவில் ஒரு சிறுவன் மற்றும் சிறுமியுடன் நிசான் ரகக் கார் போர்ட்டிக்சன் தஞ்சோங் அகாஸ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து பொதுமக்களிடமிருந்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.
ஷா ஆலம் முகவரியைக் கொண்ட ஆறு மற்றும் எட்டு வயதுடைய அச்சிறார்கள் வாகனத்தில் சிக்கி நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இரு சிறார்கள் ஆற்றில் மூழ்கி மரணம்- தந்தை, காதலிக்கு 7 நாள் தடுப்புக் காவல்
5 செப்டெம்பர் 2025, 8:15 AM