சிரம்பான், செப். 5- போர்ட்டிக்சன், தஞ்சோங் அகாஸில் உள்ள லிங்கி ஆற்றில் கார் ஒன்று விழுந்து இரு சிறார்கள் மூழ்கி இறந்தது தொடர்பான விசாரணைக்கு உதவ ஒரு ஆடவரும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வாக்குமூலம் வழங்கியது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவ்விரு பிள்ளைகளின் தந்தை என சந்தேகிக்கப்படும் 46 வயது உள்ளூர் ஆடவரும் 41 வயதுடைய ஒரு பெண்ணும் நேற்றிரவு 8.00 மணியளவில் போர்ட்டிக்சன் மாவட்ட காவல் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது தெரிவித்தார்.
அந்த அந்த ஆடவருக்கு 16 முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. அதில் மோசடி மற்றும் குற்றச் செயல் தொடர்பான நான்கு வழக்குகளுக்காக அவர் தேடப்பட்டு வந்தார். அதே நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு எந்த குற்றப் பதிவும் இல்லை.
இருவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனைகளின் முடிவுகளும் எதிர்மறையாக இருந்தன. சம்பந்தப்பட்ட காரைச் சோதனையிட்டதில் அது முன்பு காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக தடுப்புக்காவல் விண்ணப்பத்திற்கு இரண்டு சந்தேக நபர்களும் இன்று சிரம்பான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் போர்ட்டிக்சன் மாவட்ட காவல் நிலையத்தை 06-6472222 என்ற எண்ணில் அலலது விசாரணை அதிகாரி ஏஎஸ்பி ஹுசைரின் சே ஹுசேனை 012-9654927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அல்சாஃப்னி கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, நேற்று காலை 11.45 மணியளவில் ஒரு சிறுவன் மற்றும் சிறுமியுடன் நிசான் ரகக் கார் போர்ட்டிக்சன் தஞ்சோங் அகாஸ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து பொதுமக்களிடமிருந்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.
ஷா ஆலம் முகவரியைக் கொண்ட ஆறு மற்றும் எட்டு வயதுடைய அச்சிறார்கள் வாகனத்தில் சிக்கி நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இரு சிறார்கள் நீரில் மூழ்கி மரணம்: வாக்குமூலத்தில் முரண்பாடு- இருவர் கைது
5 செப்டெம்பர் 2025, 4:59 AM