ஜோகூர் பாரு, செப். 5- இங்குள்ள சூராவ் ஒன்றிலிருந்து திருடப்பட்ட சவ வாகனம் ஜாலான் ஸ்கூடாயில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அதனைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சூராவ் ஒன்றிலிருந்து திருடப்பட்ட சவ வாகனம் ஜாலான் ஸ்கூடாயில் அதிகாலை 2.30 மணியளவில் லோரியுடன் விபத்தில் சிக்கியதாக கூலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி டான் செங் லீ கூறினார் அவர் கூறினார்.
எனினும்,விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அந்த வாகனத்தை திருடிச் சென்ற சந்தேக நபருக்கு முகம் மற்றும் கால்களில் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த சந்தேக நபருக்கு 14 முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது எனக் கூறிய அவர், அவ்வாடவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 379ஏ பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் மேலும் மூன்று நபர்களை தாங்கள் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.