ஷா ஆலம், செப். 5- கோல குபு பாரு, பெர்த்தாக் பூர்வக்குடி கிராமத்தில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக ஆற்றின் மறு கரையில் சிக்கிய 12 போலீஸ்காரர்கள் உள்ளிட்ட 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அவர்களை அனைவரையும் தமது தரப்பு நேற்றிரவு 7.50 மணியளவில் வெற்றிகரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
நேற்று மாலை 6.42 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து கோல குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
சம்பவ இடம் தீயணைப்பு நிலையத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இரவு. 7.07 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு வீரர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டன என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் நேற்று மாலை 6.00 மணி வரை இடியுடன் கூடிய அடை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை முன்னதாக கணித்திருந்தது.