ஷா ஆலம், செப். 5- சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளப் பிரச்சினையைச் சமாளிக்க 400 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹஷிம் தெரிவித்தார்.
இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு 350 கோடி வெள்ளியும் மாநில அரசு 50 கோடி வெள்ளியும் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதற்கான காரணத்தைக் கண்டறியவும் முடிக்கப்படாத திட்டங்கள் குறித்த கருத்துகளைப் பெறவும் தாம் ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திற்கும் செல்வதாக அவர் தெரிவித்தார்.
வெள்ளப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்கும் வகையில் ஒப்புதல் பெற வேண்டிய ஒவ்வொரு திட்டத்தையும் நாங்கள் மதிப்பீடு செய்து வருகிறோம் என்று நேற்று இங்கு ஒருங்கிணைந்த வடிநில மேலாண்மைத் திட்ட மறுஆய்வுப் பட்டறையைத் தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
கடந்த மே மாதம் கிள்ளான் அரச மாநகர் மன்றத்துடன் தனது முதல் சந்திப்பை நடத்திய இஷாம், அந்தப் பகுதியில் வெள்ளப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான திட்டங்கள் பற்றி விவாதித்தார்.
இந்த சந்திப்பின் விளைவாக மேரு மற்றும் பாண்டமாரன் உள்ளிட்ட 13 வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டிய 17 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டன.
அதே சமயம், இந்த வெள்ள விவகாரம் குறித்து விவாதிக்க தனது தமது தரப்பு விரைவில் சிப்பாங் நகராண்மைக் கழகத்துடன் சந்திப்பு நடத்தும் என்று இஷாம் தெரிவித்தார்.
நான் கிள்ளான், ஷா ஆலம், சுபாங் ஜெயா, கோல சிலாங்கூர், காஜாங் மற்றும் செலாயாங் ஆகிய இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். அடுத்ததாக, வெள்ளத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக சிப்பாங் செல்வேன் என்று அவர் கூறினார்.