ஷா ஆலம், செப். 5- புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 150 பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி பெசார் கழகம் 500 ரொக்க உதவி மற்றும் மடிக்கணினியை வழங்கியது.
இந்த உதவியை வழங்குவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இன்று வரை மூன்று நாட்களுக்கு டாருல் ஏஹ்சான் கட்டிடத்தில் ஒரு சிறப்பு முகப்பிடம் திறக்கப்பட்டுள்ளதாக எம்.பி.ஐ. அறக்கட்டளையின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோர் தெரிவித்தார்.
முன்னதாக, புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிஉதவி வழங்கிய நிலையில் அதில் சிலர் விடுபட்டிருப்பதை மாணவர் தரவுகளில் கண்டறிந்தோம். இதனால் சிலர் தங்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்று புகார் செய்தனர்.
பின்னர், பள்ளித் தகவல்களுடன் மறு சரிபார்ப்பு செய்வதற்காக சிலாங்கூர் சமூக நலத் துறை மற்றும் பெட்டாலிங் நில மற்றும் மாவட்ட அலுவலகத்திலிருந்து தரவுகளைப் பெற்றோம். தரவுகள் புதுப்பிக்கப்பட பிறகு இறுதியாக உதவிகள் வழங்கப்படுகின்றன என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
தனியார் பள்ளிகள் உட்பட 30 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எம்.பி.ஐ அறக்கட்டளை மூலம் இந்த நிதி ஒதுக்கப்பட்டதாகவும் மடிக்கணினிகளை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) நன்கொடையாக வழங்கியதாகவும் அவர் விளக்கினார்.
இந்த உதவியைப் பெறுபவர்கள் கல்வி நோக்கங்களுக்காக அவற்றை பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இது சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலனில் மாநில அரசு மற்றும் எம்.பி.ஐ. கொண்டுள்ள அக்கறையின் அறிகுறியாகும் என்றார் அவர்.
புத்ரா ஹைட்ஸ் வெடிவிபத்து- 150 மாணவர்களுக்கு வெ.500 ரொக்கம், மடிக்கணினி அன்பளிப்பு
5 செப்டெம்பர் 2025, 3:55 AM