ஜோர்ஜ் டவுன், செப். 4 - பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர் "தொலைபேசி மோசடி" கும்பலின் வலையில் சிக்கி 838,328 வெள்ளியை இழந்தார்.
அந்த 75 வயது நபரை கடந்த மாதம் தொடர்பு கொண்ட காவல்துறை அதிகாரி எனக் கூறிக்கொண்ட ஒரு சந்தேக நபர், தவறான தகவல்களைப் பரப்புவதிலும் பணமோசடி செய்வதிலும் ஈடுபட்டதால் அவரது பெயர் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அச்சுறுத்தியுள்ளார் என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் கூறினார்.
சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் சேமிப்புக் கணக்குத் தகவல் அனைத்தையும் கேட்டறிந்து, நிரந்தர சேமிப்புக் கணக்கிலிருந்து தனது மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றும்படி உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி பாதிக்கப்பட்ட ஆடவரைத் தொடர்பு கொண்ட சந்தேக நபர், விசாரணைக்கு தேவைப்படுகிறது எனக்கூறி வங்கி அட்டையை கடித உறையில் வைத்து தனது குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாவலர் சாவடிக்கு அருகில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார் என அஸிசி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தனது சேமிப்புக் கணக்கில் இருந்த அனைத்துப் பணமும் அடையாளம் தெரியாத நபரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதைக் அறிந்த பின்னர் பாதிக்கப்பட்ட நபர் நேற்று வடகிழக்கு மாவட்ட காவல் தலைமையகத்தில் புகார் அளித்தார் என அவர் குறிப்பிட்டார்.
இந்த புகார் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாகக் கூறிய அவர், தனிப்பட்ட தகவல்கள் அல்லது வங்கி விவரங்களைக் கேட்கும் தொலைபேசி அழைப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
தொலைபேசி மோசடி - முன்னாள் பயிற்சியாளர் 838,000 வெள்ளியைப் பறிகொடுத்தார்
4 செப்டெம்பர் 2025, 10:29 AM