சிரம்பான், செப். 4 - போர்ட்டிக்சனில் உள்ள தஞ்சோங் அகாஸ் பாலத்தில் இன்று காலை ஒரு குடும்பத்தினர் பயணித்த வாகனம் ஆற்றில் விழுந்ததில் இரண்டு சிறார்கள் அதில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நிசான் தியானா கார் விபத்தில் சிக்கி ஆற்றில் விழுந்தது தொடர்பில் காலை 11.44 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட காரில் நான்கு பேர் பயணம் செய்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. அதிலிருந்த 40 வயதுடைய திருமணமான தம்பதியினர் பொதுமக்களால் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
இருப்பினும், ஆறு மற்றும் எட்டு வயதுடைய சிறுவன் மற்றும் சிறுமி ஆகியோர் இடிபாடுகளில் இன்னும் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களின் நிலை தெரியவில்லை என்று இன்று இங்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிற நிறுவனங்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகிறது.
கார் ஆற்றில் விழுந்தது - இடிபாடுகளில் சிக்கிய சிறார்களை மீட்கும் பணி தீவிரம்
4 செப்டெம்பர் 2025, 9:33 AM