ஈப்போ, செப். 4 - கிரீக், தாசேக் பாண்டிங்கில் உள்ள ஒரு மிதக்கும் வீட்டில் நேற்றிரவு நடத்தப்பட்ட சோதனையில் அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்ட மொத்தம் 79 மானிய விலை திரவமய பெட்ரோலிய எரிவாயு (எல்.பி.ஜி.) சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பந்தப்பட்ட இடத்தில் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் ஒரு வாரமாக மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் விளைவாக மதியம் 1.30 மணிக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் பேராக் மாநில இயக்குநர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.
மீன் சுத்திகரிப்புக்காக தண்ணீரை சூடாக்கும் நோக்கத்திற்காக அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட 12 கிலோ எடை கொண்ட 79 மானிய விலை எல்.பி. ஜி. சிலிண்டர்கள் இச்சோதனையின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நடவடிக்கையில மொத்தம் 79 மானிய விலை சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு 7,460 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அனுமதி இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை சேமித்து வைத்திருந்ததற்காக மிதக்கும் வீட்டின் உரிமையாளர் 1974 விநியோகக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் விசாரிக்கப்படுவதாக கமாலுடின் கூறினார்.
கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை வர்த்தக தரப்பினருக்கு விற்பனை செய்வது அனுமதிக்கப்படவில்லை என்றும் இதன் தொடர்பில் எரிவாயு விநியோகிப்பாளர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மிதக்கும் வீட்டில் உள்நாட்டு வர்த்தக அமைச்சு சோதனை - 79 மானிய விலை சிலிண்டர்கள் பறிமுதல்
4 செப்டெம்பர் 2025, 7:18 AM