ஈப்போ, செப். 4 - பேராக் மாநில நிலையிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது பிரதான மேடையில் பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவை அணுக முயன்ற உள்நாட்டுப் பெண் கண்காணிப்பிற்காக தஞ்சோங் ரம்புத்தான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அந்த 41 வயது பெண்ணுக்கு எதிரான தடுப்புக் காவல் இன்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து 2001ஆம் ஆண்டு மனநலச் சட்ட (சட்டம் 615) விதிகளின்படி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகப் பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நிறைவடைந்து, விசாரணை அறிக்கை பேராக் மாநில துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. கூடுதல் அறிவுறுத்தல்கள் மற்றும் முடிவுகளுக்காக அந்த அறிக்கை இன்று புத்ராஜெயாவில் உள்ள சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
இந்த வழக்கின் முடிவு தொடர்பான மேல் விபரங்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய மற்றும் பொது ஒழுங்கை அச்சுறுத்தும் வகையிலான தவறான ஊகங்களைச் வெளியிட வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி பேராக் மாநில கீதம் இசைக்கப்பட்டபோது பிரதான மேடையில் இருந்த சுல்தான் நஸ்ரினை அணுக முயன்றபோது அந்தப் பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மனநல சிகிச்சை மற்றும் போதைப்பொருள் தொடர்பான கடந்த காலப் பதிவுகளைக் கொண்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
பேராக் சுல்தானை நெருங்க முயன்ற பெண்ணுக்கு மனநல பரிசோதனை
4 செப்டெம்பர் 2025, 7:11 AM



