கோலாலம்பூர், செப் 3 - மலேசியா முழுவதும் மோசமான நிலையில் உள்ள 756 பள்ளிகளின் மறுகட்டமைப்பு திட்டங்கள் நிறைவடைந்துள்ளன என கல்வி துணை அமைச்சர் வோங் கா வோங் தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல், 197 பள்ளிகள் கட்டுமான நிலையிலும் 222 பள்ளிகள் தொடக்கக் கட்ட கட்டுமான நிலையிலும் உள்ளதாக குறிப்பிட்டார்.
"2016-ஆம் ஆண்டு தொடங்கி ஆகஸ்ட் 2025-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் மோசமான நிலையில் உள்ள 1,175 பள்ளிகளின் மறுகட்டமைப்பு திட்டங்களுக்கு 1,247 கோடியே எழுபது லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது", என்றார் அவர்.
இன்று, நாடாளுமன்றத்தில் சரவாக் மாநிலத்தில் குறிப்பாக, சரடோக் மற்றும் கபோங் பகுதிகளில் மோசமான நிலையில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள ஒட்டுமொத்த செலவு குறித்து வோங் விளக்கமளித்தார்.
சரவாக் மாநிலத்தில் 390 திட்டங்களுக்காக 384 கோடியே 70 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டிற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்ததாக விளக்கினார்.
-- பெர்னாமா


