கோலாலம்பூர், செப் 3 - கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பிரதமரின் சிறப்புரை நிகழ்வு நாட்டுப்பற்று உணர்வை ஊட்டுவதற்கும் நாட்டின் மிகவும் ஒளிமயமான எதிர்காலத்திற்கான உறுதியை வலுப்படுத்துவதற்கும் ஒரு தளமாக இருந்தது
இவ்வாண்டு மெர்டேக்கா தின சிறப்பு உரையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ள தேசிய ஸ்திரத்தன்மை, பல சமூகங்களிடையே ஒற்றுமை வளர்ப்பது மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவை குறித்து நாட்டு மக்கள் அனைவரும் கவனத்தில் எடுத்துக் கொள்வது நலமாகும்.

அதே கருத்தை பிரதமர் மட்டுமின்றி மாட்சிமை தங்கிய சுல்தான் சிலாங்கூர் அவர்களும், சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியும் கூட வலியுறுத்தி உள்ளனர்.
ஒரு நாடு நிலையான ஊழல் அற்ற ஆட்சி கொண்டிருப்பதன் பலனையும் மற்றும் மக்களின் ஒற்றுமையால் நாடு அடையும் மேம்பாடுகளையும் நன்கு உணர்ந்து, அதன் அவசியத்தை அரசரும் நாட்டின் முக்கியத் தலைவர்களும் மக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
நாடு 2018ஆம் ஆண்டுக்கும் 2022 ஆண்டு பொதுத் தேர்லுக்கும் இடையே நிலையற்ற மூன்று அரசாங்கத்தை கொண்டிருந்தது. அந்த காலகட்டம் இந்த நாட்டின் வரலாற்றில் மிக இருண்ட காலம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
அரசாங்க இயந்திரங்களின் செயல்பாடுகள் மட்டுமின்றி, நாட்டின் தொழில் துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் பெரிய சரிவு கண்டது. அதிகமான வெளிநாட்டு முதலீடுகள் நம் நாட்டை விட்டு வெளியேறின.

அதே வேளையில் மக்கள் வெள்ளை கொடி ஏந்தி உணவுக்கு கூட உதவி வேண்டி மற்றவர்களின் கையை எதிர்பார்க்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப் பட்டார்கள்.
கோவிட் தொற்று நோய் பொருளாதார தாக்கத்திலிருந்து பல உலக நாடுகள் மற்றும் அதன் மக்களும் விரைவாக விடுபட்ட வேளையில், மூன்று ஆண்டுகள் ஆனாலும் நம் நாடு மட்டும் ஏன் கோவிட் தொற்றின் பொருளாதார தாக்கத்திலிருந்து விடுபடவில்லை? மக்கள் ஏன் வறுமையின் கொடிய பிடியில் இருந்து விடுபடவில்லை.

பொருளாதார சிக்கலுக்கு நாட்டில் ஏற்பட்ட கோவிட் 19 தொற்றுநோய் ஒரு காரணமாக கூறப்பட்டாலும், நோய் தாக்கத்தையே முழு காரணமாக கூறி ஒளிந்துக் கொள்ள கூடாது. அப்படி செய்வது நமது பலவீனத்தை பறைசாற்றுகிறது.
நாட்டு மக்கள் தங்கள் வயதான அல்லது முடியாத காலக்கட்டங்களில் பயன்படுத்த தயார்படுத்தி வந்து ஊழியர் சேமநிதி சந்தா (EPF) போன்ற சேமிப்புகளிலிருந்து பணத்தை மீட்டு காலங்களிக்க வேண்டிய சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

நாட்டுக்கும், மக்களுக்கும் மிக கடினமான அக்காலக் கட்டத்தில் வீண் விரயங்கள், குறைந்தனவா? இல்லை. ஊழல் குறைந்தனவா என்றால் அதுவும் இல்லை. எரியும் வீட்டில் பிடுங்குவது ஆதாயம் என்ற பழமொழிக்கு ஏற்ப அன்று ஆட்சியில் இருந்தவர்கள் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு விநியோகிக்க தயார் செய்த சமையல் எண்ணெயை கூட அன்னிய நாட்டு சந்தைக்கு கடத்தி விற்றனர்.
மக்கள் வறுமையின் கொடிய பிடியில் இருந்து விடுபடவில்லை. ஆனால், பிரதமர் அன்வார் பதவி ஏற்று மூன்று ஆண்டுகளுக்குள் எல்லாம் மாறிவிட்டது. நாட்டில் விலைவாசிகள் குறைந்து, நிலை பெற்றுள்ளதுடன், மக்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. மக்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் GST வரி இல்லாமல் (EPF) ஊழியர் சேமநிதி சந்தா தபோங் ஹஜி, அமான சிம்பானான் நேஷனல் போன்ற நாட்டின் எந்த நிலையான எதிர்கால சேமிப்பு திட்டத்திலும் கை வைக்காமல், மக்களுக்கு 100 வெள்ளி வழங்கும் சாரா உதவி திட்டத்திற்கு மட்டும் 210 கோடி வெள்ளியை வழங்கியதும், இவ்வாண்டு உதவிக்கான மொத்த ஒதுக்கீடு 1500 கோடியாக உயர்த்தி இருப்பதும், அதேவேளையில் அன்னிய கடன்கள் குறைத்து வருவதும், நாட்டின் நாணய நன்மதிப்புகள் உயர்வதும். சர்வதேச அளவில் நாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்து வருவதையும் பிரதமர் சுட்டிகட்டியுள்ளார்.
பல இன சமய பங்களிப்புக்கள், இந்நாட்டின் வளர்ச்சிக்கு ஈடு இணையற்ற மூலதனமாக கொண்டு, அனைத்து மக்களின் உரிமைகளை மதித்து அவர்களின் மேம்பாடுகளுக்கான திட்டமாகவே அரசாங்க திட்டங்களை பிரதமர் முன்னெடுத்து வருகிறார்.

அதே வேளையில் இன, சமய உறவுகளை உதாசீனப்படுத்தும் குழுவினரின் செய்கைகளையும், அவர்கள் யார் எவர் என்பதையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுல்தான் நஸ்ரின் ஷா வை தாக்க முயன்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பெண் ஒரு சீனர் என பொய்யான அறிக்கையை பாஸ் கட்சியின் மஞ்ஜோய் சட்டமன்ற உறுப்பினர் ஹபீஸ் சப்ரி வெளியிட்டதும், புக்கிட் அமானின் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (சிஐடி) இயக்குநராக எம் குமார் நியமிக்கப்பட்டதை அடுத்து பெர்சத்துவின் பட்ருல் ஹிஷாம் ஷாஹர் இன ரீதியான குற்றம் கூறியதையும், இதற்கு முன் மாற்று அணி ஒன்றின் பிரதம வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவர் மலேசிய கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ், குடிமகனாக இருப்பதற்கு "இஸ்லாத்தை தழுவ வேண்டும்" என்று வெளிப்படையாக அறிக்கை விட்டதையும் நாம் மறந்து விடக்கூடாது.

தேசிய ஸ்திரத்தன்மை, பல சமூகங்களிடையே ஒற்றுமை வளர்ப்பதையும், ஊழலுக்கு எதிரான போராட்டங்களுக்கு பிரதமரின் கருத்தை ஆதரித்து வெற்றிகரமான சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டதும் மலேசியர்களால் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அதேவேளையில் தீவிரவாதம் மற்றும் பிற்போக்கு சக்திகளை புறக்கணிக்க வேண்டியதன் அவசியத்தை மீடியா சிலாங்கூர் வலியுறுத்துகிறது.