கோலாலம்பூர், செப். 3 - நிதியமைச்சின் சிறப்பு ஒப்புதலுக்கு ஏற்ப ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்ட கொள்முதல் செயல் முறை மூலம் 91 பி வகை ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பெறும் பணியில் சுகாதார அமைச்சு இப்போது ஈடுபட்டுள்ளது.
பொது சேவைக்கான தேவை மற்றும் அவசரகால நிவாரணத்திற்கான அத்தியாவசியத்தை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள சுகாதார வசதிகளுக்கு அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் கட்டம் கட்டமாக விநியோகிக்கப்படும் என்று துணை சுகாதார அமைச்சர் டத்தோ லுகனிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்தார்.
தற்போதைய பதிவுகளின் அடிப்படையில், சுகாதார அமைச்சிடம் தற்போதுள்ள மொத்தம் 1,975 ஆம்புலன்ஸ் வாகனங்களில் 1,773 அல்லது 89.8 சதவீதம் ஆறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என்று அவர் கூறினார்.
பழைய ஆம்புலன்ஸ் வாகனங்களை மாற்றுவதற்காகவும் பழுதுபார்ப்பதற்கு வசதிப்படாத வாகனங்களை ஈடு செய்வதற்காகவும் புதிய வாகனங்களை வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
925 பி வகை புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை பெறுவதற்கான செயல்முறையை அமைச்சு இவ்வாண்டு ஜூலை 31ஆம் தேதி தொடங்கியது.
ஆம்புலன்ஸ் விநியோகங்கள் கால அட்டவணையின்படி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக சபா/லாபுவான், சரவாக், மத்திய, தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு என ஆறு மண்டலங்களில் கொள்முதல் செய்ய அமைச்சு தீர்மானித்துள்ளது என்று அவர் கூறினார்.
இன்று மேலவையில் நடைபெற்ற கேள்வி பதில் அமர்வில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மருத்துவமனைகளுக்கு புதிய ஆம்புலன்ஸ்களை வழங்குவது மற்றும் ஆறு ஆண்டுகளுக்கும் மேலான அல்லது 200,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயண தூரத்தைக் கொண்ட ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை குறித்து செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது துணையமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


