சிப்பாங், செப் 3 - உலகப் பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர் சென் தாங் ஜி - டோ ஈ வெய் தங்கம் வென்ற நிலையில் மகளிர் இரட்டையர் பிரிவில் பெர்லி தான் - எம் தீனா வெள்ளியை கைப்பற்றினர். இது ரோட் டு கோல்ட் திட்டத்தின் சிறந்த அடைவுநிலைக்கான சான்றாகும்.
அரசாங்க ஒதுக்கீடுகள் வீண் விரயம் அல்ல, மாறாக அவை தேசிய விளையாட்டு துறையின் வளர்ச்சியை வலுப்படுத்தும் சிறந்த அடைவுநிலையின் பிரதிபலிப்பு என இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.
"இத்திட்டத்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், காரணம் ஒவ்வொரு விளையாட்டாளரும் நாட்டிற்கான தங்கள் உறுதிப்பாட்டை வழங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள். இது நாட்டிற்கான முதலீடு ஆகும்.
மேலும், விளையாட்டார்களும் கையெழுத்திட்ட உறுதிப்பாட்டைப் பின்பற்றுகிறார்கள். நான்கு மாதங்களில் அதற்கான வெற்றியை நாம் கண்டுள்ளோம்," என்றார் அவர்.
அதுமட்டுமில்லாமல், ஷகாம் திட்டத்தின் (SHAKAM) கீழ் தங்கம் வென்றவர்களுக்கு 20 ஆயிரம் ரிங்கிட்டும் வெள்ளி வென்றவர்களுக்கு 10 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படும் என்று ஹன்னா மேலும் குறிப்பிட்டார்.
பெர்னாமா


