பெய்ஜிங், செப். 3 - கிழக்கு கடற்கரை ரயில் தண்டவாளத் (இ.சி.ஆர்.எல்.) திட்டத்தை தாய்லாந்து எல்லையிலுள்ள கிளந்தான் மாநிலத்தின் ரந்தாவ் பஞ்சாங் நகருடன் இணைப்பதற்கான திட்டங்கள் இன்னும் ஆரம்ப கட்ட விவாதத்தில் உள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இத்திட்டம் தொடர்பான விவரங்கள், செலவு மற்றும் கட்டணம் செலுத்தும் முறை குறித்து சம்பந்தப்பட்டத் தரப்பினர் ஆராய வேண்டும். இது ரயில் திட்டத்தின் தொடர்ச்சியாக இருப்பதால் செலவுகள் குறைவாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
சீனாவிற்கான நான்கு நாள் பயணத்தை முடிப்பதற்கு முன் நடைபெற்ற மலேசிய ஊடகங்களுடனான
செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்றிரவு இங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீனப் பிரதமர் லீ கியாங் ஆகியோருடன் நடத்தப்பட்ட தனித்தனி இருவழி சந்திப்புகளில் இந்த விஷயம் குறித்து விவாதிக்கப்பட்டதாக அன்வார் கூறினார்.
ரந்தாவ் பஞ்சாங்கிலிருந்து 20 முதல் 25 கிலோமீட்டர் தொலைவில் தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள பகுதி வரை இந்த பரிந்துரை உள்ளடக்கியுள்ளது என்று அவர் சொன்னார்.
அந்தப் பிராந்தியத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை இந்த பரிந்துரை நனவாக்கும் என நிதியமைச்சருமான அன்வார் நம்பிக்கைத் தெரிவித்தார்.
கோத்தா பாருவிலிருந்து ரந்தாவ் பாஞ்சாங் வரையிலான பகுதி, குறிப்பாக ரந்தாவ் பாஞ்சாங் சற்று பின்தங்கியுள்ளது. இந்த நிலையத்தின் மூலம் வளர்ச்சி மற்றும் வணிக சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.
ரந்தாவ் பஞ்சாங் வரை இ.சி.ஆர்.எல். விரிவாக்கம்- பேச்சுவார்த்தை தொடர்கிறது
3 செப்டெம்பர் 2025, 10:12 AM


