ஷா ஆலம், செப். 3 - சிலாங்கூர் மோபிலிட்டி முன்னெடுப்பின் கீழ் அழைப்பு அடிப்படையிலான வேன் போக்குவரத்து (டி.ஆர்.டி.) சேவையின் அடுத்த கட்ட அமலாக்கம் குறித்து மாநில அரசு ஆராய்ந்து வரும் நிலையில் இத்திட்டம் இவ்வாண்டு இறுதியில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்ட பரிந்துரைக்கான கோரிக்கையில் (ஆர்.எஃப்.பி.) ஐந்துக்கும் குறைவான நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றதாகப் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
இச்சேவை நடத்துநர்கள் தரைப் பொதுப் போக்குவரத்து நிறுவனத்திடமிருந்து (அபாட்) அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையே இந்த குறைவான விண்ணப்பங்களுக்கு காரணம் என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தாமதத்திற்கு ரெப்பிட் கேஎல் இன்னும் தங்கள் டி.ஆர்.டி. ஒருங்கமைப்பை விரிவுபடுத்தி வருவதுதான் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் மோபிலிட்டி சிலாங்கூர் சேவை தொடர்ந்தால் சேவை வழங்கும் பகுதிகளில் ஒன்றுடன் ஒன்று மோதாமல் இருப்பதை உறுதிசெய்யவும் இரு தரப்பினருக்கும் வரையறுக்கப்பட்ட வளங்களை அதிகப்படுத்தவும் நாங்கள் ரெப்பிட் கே.எல். நிறுவனத்துடன் அணுக்கமாக பணியாற்றி வருகிறோம் என்று இங் கூறியதாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
மானியத்தை சோதனை கட்டமாகத் தொடர வேண்டுமா அல்லது வேறு முறையை மாற்ற வேண்டுமா என்பது உட்பட, மோபிலிட்டி சிலாங்கூர் போக்குவரத்து சேவைக்கான சிறந்த வணிக மாதிரியை மாநில அரசு இன்னும் மதிப்பீடு செய்து வருவதாக அவர் மேலும் கூறினார் .
மோபிலிட்டி சிலாங்கூர் முன்னெடுப்பின் கீழ் ஆண்டு இறுதியில் டி.ஆர்.டி. சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று நம்புகிறேன். ஆனால் அது நிச்சயமாக 2026 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூரில் டிரான்சிட் வேன் சேவை இவ்வாண்டு இறுதியில் மீண்டும் தொடங்கப்படும்
3 செப்டெம்பர் 2025, 10:01 AM


