கோலாலம்பூர், அக். 3 - மலேசியாவில் பகடிவதை தடுப்பு வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து ஆராயும் நோக்கில் நேற்று நடத்தப்பட்டக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் பகடிவதை எதிர்ப்பு தீர்ப்பாய வரைவு மசோதாவின் உருவாக்கமும் அடங்கும்.
குற்றங்களுக்கான தண்டனை அம்சத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் பிள்ளைகளின் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்ப்பதன் மூலம் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான அம்சங்களையும் இந்தக் கூட்டம் ஆய்வு செய்ததாக பிரதமர் துறையின் சட்ட விவகாரத் துறை கூறியது..
2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் (சட்டம் 611) கீழ் உள்ள கொள்கைகளுக்கு ஏற்ப இன்னும் சிறார்களாக அல்லது பதின்ம வயதினராக இருக்கும் குற்றவாளிகளுக்கான மறுவாழ்வு அணுகுமுறையின் முன்னுரிமையும் கூட்டத்தில் ஆராயப்பட்டது என்று அத்துறை நேற்றிரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
இக்கூட்டம் பகடிவதைப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான சிறப்புக் குழுவின் தலைவராக இருக்கும் பிரதமர் துறை (சட்டமன்றம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் தலைமையில் தலைநகரில் நடைபெற்றது.
பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், உள்ளூர் சமூகங்கள் ஆகியவற்றில் பகடிவதை தடுப்பு முயற்சிகள் விரிவாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய முழு அரசாங்க அணுகுமுறையைப் பயன்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதிகரித்து வரும் பகடிவதைப் பிரச்சினை ஒரு தேசிய சவாலாக மாறி வருகிறது. இது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த விஷயத்தில் வலுவான, நியாயமான மற்றும் பயனுள்ள பகடிவதை தடுப்பு செயல்முறையை மலேசியா கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக உறுதியான மற்றும் நடைமுறை செயல் திட்டத்தை உருவாக்குவதில் இந்தக் கூட்டம் ஒரு முக்கியமான தொடக்கப் படியாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகடிவதை எதிர்ப்பு தீர்ப்பாய மசோதா உருவாக்கம் குறித்து புத்ராஜெயா பரிசீலனை
3 செப்டெம்பர் 2025, 7:01 AM


