ஷா ஆலம், செப். 3 - சமூக ஊடகங்களில் இனவாத கருத்துகளை பரப்பியது தொடர்பில் மஞ்சோய் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஹபீஸ் சப்ரியிடம் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.), வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
அண்மையில் ஈப்போவில் நடைபெற்ற பேராக் மாநில நிலையிலான தேசிய தின கொண்டாட்டத்தின் போது மேடை ஏறிய ஒரு பெண் குறித்து பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அரச மலேசிய போலீஸ் படையின் ஒத்துழைப்புடன் நேற்றிரவு புக்கிட் அமான் போலீஸ தலைமையகத்தில் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட அந்தப் பெண் ஒரு சீனர் என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது. அதே நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டு தவறானது என்பது புக்கிட் அமான் விசாரணையில் கண்டறியப்பட்டதோடு இனப் பதற்றத்தையும் எதிர்மறையான கருத்துக்களையும் தூண்டும் சூழலை அது கொண்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த வழக்கு 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் (சட்டம் 588) 233 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது. இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 500,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இனவாதக் கருத்துகளை வெளியிட்ட சட்டமன்ற உறுப்பினரிடம் எம்.சி எம்.சி. வாக்குமூலம் பதிவு
3 செப்டெம்பர் 2025, 6:40 AM


