ஷா ஆலம், செப். 3 - குற்றங்கள் அதிகம் நிகழும் கருப்பு பகுதியாக அடையாளம் காணப்பட்ட செம்பாக்கா எல்ஆர்டி நிலையம் முதல் பாண்டான் இண்டா உணவு விற்பனை வளாகம் வரையிலான பகுதி பாதுகாப்பான நகரத் திட்டத்தில் முக்கிய இலக்காகக் கொள்ளப்படும்.
மொத்தம் 500,000 வெள்ளி ஒதுக்கீட்டை உள்ளடக்கிய இந்த திட்டம் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு மற்றும் பிளான் மலேசியா ஆகியவற்றின் முன்னெடுப்பாகும் என்று அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
குற்றச் செயல் விகிதத்தைக் குறைப்பது, பொது மக்களின் பாதுகாப்பை அதிகரிப்பது மற்றும் உள்ளூர் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நீண்டகாலத் திட்டம் இதுவாகும்.
உள்கட்டமைப்பு ஏற்பாடுகள், சமூக திட்டங்கள், உள்ளடக்கிய மற்றும் நிலையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நகராண்மைக் கழகத்தின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இந்த முயற்சி அமைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் அக்டோபரில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த மேம்பாட்டுத் திட்டங்களில் ஐந்து கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, பாதசாரிகள் நடைபாதைகளை சரிசெய்வது மற்றும் ஐந்து அடையாள பலகைகளை நிறுவுவது ஆகியவையும் அடங்கும் என்று நகராண்மைக் தெரிவித்தது.
மேலும், மரங்களை வெட்டுவது, வடிகால்களை சுத்தம் செய்வது மற்றும் பாதுகாப்புத் தடைகளை நிறுவுவது ஆகியவற்றுடன் அப்பகுதியில் பாதுகாப்பு பிரச்சாரங்களையும் நடத்தப்போவதாகவும் நகராண்மைக் கழகம் கூறியது.
கேந்திர முன்னுரிமைகள் மற்றும் நிதி ஆதாரங்களைப் பொறுத்து பாதுகாப்பான நகரத் திட்டத்தை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நகராண்மைக் கழகம் தெரிவித்தது.
அம்பாங் ஜெயா பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ் குற்றம் நிகழும் பகுதிகளில் கூடுதல் கவனம் - எம்.பி ஏ.ஜே.
3 செப்டெம்பர் 2025, 4:16 AM


