கோத்தா கினபாலு, செப். 3 - முதலாம் படிவ மாணவியான ஸாரா கைரினா மகாதீரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் நோக்கிலான விசாரணை இன்று இங்குள்ள மரண விசாரணை நீதிமன்றத்தில் தொடங்குகிறது.
இம்மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளிலும் அதனைத் தொடர்ந்து 8 முதல் 12ஆம் தேதிகளிலும் பின்னர் செப்டம்பர் 17 முதல் 19 மற்றும் செப்டம்பர் 22 முதல் 30 வரையிலும் இந்த மரண விசாரணை நடைபெறும்.
இந்த 19 நாள் விசாரணையில் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமீர் ஷா அமீர் ஹசான் மரண விசாரணை அதிகாரியாகச் செயல்படுவார்.
இந்த மரண விசாரணையின்போது சாட்சியமளிக்க அந்த பதின்ம வயது பெண்ணை பிரேதப் பரிசோதனை செய்த உடற்கூறு நிபுணர் உட்பட மொத்தம் 70 சாட்சிகள் அழைக்கப்படுவார்கள்.
இவ்விசாரணைக்கு துணைத் தலைமை வழக்குரைஞர் அதிகாரி II டத்தோ பதியாஸ் ஜமான் அகமது, துணை அரசு வழக்கறிஞர்களான நஹ்ரா டோலா, முகமட் ஃபைரூஸ் ஜோஹாரி, டானா அரபி வசானி, சோபியா சவயன் மற்றும் டேசியா ஜேன் ரோமானஸ் ஆகியோர் வழக்கை நடத்தும் அதிகாரிகளாகச் செயல்படுவார்கள் .
பதிமூன்று வயதான ஸாரா கைரினா கடந்த ஜூலை 17ஆம் தேதி கோத்தா கினாபாலுவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.
கடந்த ஜூலை 16ஆம் தேதி அதிகாலை 4.00 மணியளவில் பாப்பாரில் உள்ள தனது பள்ளி விடுதிக்கு அருகிலுள்ள வடிகாலில் மயக்கமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த இளம்பெண் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஸாரா கைரினா மரண விசாரணை இன்று தொடங்குகிறது- 70 சாட்சிகள் அழைக்கப்படுவர்
3 செப்டெம்பர் 2025, 1:32 AM


