செர்டாங், செப் 2 - எதிர்வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், மேலும் பல வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கடந்த மே மாதத்தில் நடத்தப்பட்ட 46-வது ஆசியான் உச்சநிலை மாநாடு, சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதில், ஒட்டுமொத்த பொது சேவை கேந்திரங்கள் காட்டிய அசாதாரண செயல்திறனின் விளைவாக கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, அது எதிர்ப்பார்க்கப்படுவதாக ஆசியான் தலைவருமான அன்வார் குறிப்பிட்டார்.
"முன்னர் குறிப்பிட்டது போல, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் இணைவதோடு மலேசியாவிலும் சுற்றுலா மேற்கொள்வார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், சீனத் தலைவரும், ரஷ்யத் தலைவரும் இந்த உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வர் என நம்பப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு ஆசியானுக்கு தலைமையேற்றிருக்கும் மலேசியா, 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை சிறப்பாகவும் திறம்படவும் நடத்த முடியும் என்றும் அன்வார் நம்பிக்கைத் தெரிவித்தார்.
பெர்னாமா


