ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்.  திட்டத்தின் கீழ் 7,305  ஏழை குடும்பங்களுக்கு உதவி

2 செப்டெம்பர் 2025, 9:43 AM
ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்.  திட்டத்தின் கீழ் 7,305  ஏழை குடும்பங்களுக்கு உதவி

ஷா ஆலம், செப். 2- கடந்த 2020ஆம் ஆண்டு  முதல் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் (ஆயர் சிலாங்கூர்) 'பாக்ஸ் ஆஃப் ஹோப்' முன்னெடுப்பின் கீழ்  குறைந்த வருமானம் பெறும் 7,305 பி40 குடும்பங்கள் பலன் பெற்றுள்ளன.

பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு  (சி.எஸ்.ஆர்.) திட்டத்தின் மூலம் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள பி40 தரப்பினருக்கு  உணவு உதவி மற்றும் அடிப்படைத் தேவைக்கான பொருள்கள்  விநியோகிக்கப்பட்டதாக  அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆடாம் சஃபியன் கசாலி கூறினார்.

செசாமா மாரா எனும் இந்த சி.எஸ்.ஆர். திட்டத்தின் மூலம் ஆயர்  சிலாங்கூர்  நான்கு திட்டங்களை செயல்படுத்துகிறது. இதில் 'பாக்ஸ் ஆஃப் ஹோப்' திட்டமும்  அடங்கும்.

கடந்தாண்டில் மட்டும் 12 இடங்களில் உள்ள குடும்பங்களுக்கு 1,800 அத்தியாவசியப் பொருள்கள்  கொண்ட பெட்டிகள் விநியோகிக்கப்பட்டன என அவர் சொன்னார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட  இந்த நம்பிக்கைப் பெட்டி திட்டத்தின் வழி இவ்வாண்டு ஜூன் மாதம் வரை மொத்தம் 7,305 பி40 குடும்பங்கள் பயனடைந்துள்ளன என்று மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

மற்ற மூன்று திட்டங்கள் குறித்து  கருத்துரைத்த அவர், எஸ்.பி.எம். தேர்வுக்கு தயாராகும்  பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவ டிஜிட்டல் கல்வி வளங்களை வழங்குவதில் தனது  தரப்பு
பண்டாய் எடுகேஷன் சென்.பெர்ஹாட் நிறுவனத்துடன்   இணைந்து செயல்படுகிறது என்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது முதல் பயிற்சி வினாத்தாள் தொகுப்புகள், தேர்வுகள் மற்றும் இயங்கலை கற்றல் ஆலோசனைகளை உள்ளடக்கிய பாண்டாய் பிரீமியம் செயலி  மூலம் இன்றுவரை 415 பின்தங்கிய மாணவர்கள் கல்வி வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார்.

இவை தவிர, ஆயர் சிலாங்கூர் நிறுவனம்  கொண்டாட்டங்களின் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கிறது. மேலும் இந்த நோக்கத்திற்காக, 19 சமூக நல இல்லங்கள் அல்லது பி40 தரப்பினர் வசிக்கும்   பகுதிகளில் மொத்தம் 2,438 பேருக்கு  நிறுவனத்தின்  ஆண்டுவிழா உட்பட மலேசியாவில் கொண்டாடப்படும்  ஒவ்வொரு பண்டிகையின் போதும் உணவு வழங்கப்பட்டது.

அதோடு மட்டுமின்றி "ஹைட்ரோ ஹீரோஸ் தன்னார்வத் திட்டத்தின் கீழ்  ஆயர் சிலாங்கூர் ஊழியர்கள் கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய 17 சமூகத் திட்டங்களில் 720 மணி நேரத்திற்கும் மேலாக பங்களித்துள்ளனர்  என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.