கிள்ளான், செப். 2 - அடுத்தாண்டு சிலாங்கூரில் நடைபெறும் மலேசியா விளையாட்டுப் போட்டிகளுக்கு (சுக்மா) தயாராகும் வகையில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் சீராக நடைபெற்று வரும் நிலையில் அப்பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷா ஆலம், செக்சன் 13, டாருள் ஏஹ்சான் நீச்சல் மையம், சுபாங் துப்பாக்கி சுடும் மைதானம் மற்றும் பாண்டமாரான் விளையாட்டரங்கம் ஆகியவை கவனம் செலுத்தப்படும் இடங்களில் அடங்கும் என்று விளையாட்டு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
தற்போதுள்ள அனைத்து விளையாட்டு வசதிகளையும் மேம்படுத்தும் பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன. ஊராட்சி மனாறங்களும் இதே பணியைச் செய்து வருகிறன. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் இப்பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
நேற்று இங்குள்ள கே.எஸ்.எல் எஸ்பிளனேட் மாலில் நடைபெற்ற 2025 சிலாங்கூர் மாநில அளவிலான பள்ளிகள் சீலாட் வெற்றியாளர் போட்டியின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுக்மா சிலாங்கூர் 2026 போட்டி ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறும் வேளையில் பாரா சுக்மா செப்டம்பர் 5 முதல் 14 வரை நடைபெறும் என்று மந்திரி புசார் கடந்த ஜூலை 22ஆம் தேதி கூறியிருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா சிப்பாங் அனைத்துலகப் பந்தயத் தடத்தில் நடைபெறும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
சுக்மா - விளையாட்டு வசதிகளை தரம் உயர்த்தும் பணி மார்ச் மாதம் முற்றுப் பெறும்
2 செப்டெம்பர் 2025, 6:45 AM