தாவாவ், செப். 2 - இங்குள்ள தாவாவ் நகராண்மைக் கழக சதுக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 'ஸாராவுக்கு நீதி' எனும் ஒற்றுமை பேரணி தொடர்பாக காவல்துறைக்கு மூன்று புகார்கள் கிடைத்துள்ளன.
சபா ஆளுநருக்கு எதிராக நிந்தனை அறிக்கைகளை வெளியிட்டதாக கூறப்படும் ஒரு நபருக்கு எதிராக அனைத்து புகார்களும் பெறப்பட்டதாக தாவாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜாஸ்மின் ஹுசேன் தெரிவித்தார்.
இப்புகார்கள் தொடர்பில் 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4(1)வது பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின் 506வது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.
கூடுதலாக, தண்டனைச் சட்டத்தின் 505(பி) பிரிவு மற்றும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழும் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் இன்று இங்கு தொடர்பு கொண்டபோது கூறினார்.
இதன் தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக ஒரு பெண்ணையும் பல சாட்சிகளையும் போலீசார் தேடி வருவதாக அவர் கூறினார்.
விசாரணை வெளிப்படையாக நடத்தப்படும் என்றும் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி தாங்கள் வாக்குமூலம் எடுக்க விரும்புவதாகவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த பேரணியில் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் நிந்தனை உரைகள் மற்றும் கோஷங்கள் அடங்கிய காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.


